பக்கம் எண் :

24

அவர் அடி என் தலை மேலவே என்றருள்கிறார் அப்பர்.

     பெருமானை உணர்ந்து வழிபடும் அடியவர்களின் பெருமையை
அத்தகைய பெருமையுணர்ந்த ஆசாரியமூர்த்திகள் தானே அறிவர். அறிந்த
வண்ணம் செயலாற்றியும் உள்ளனர். அப்பாடலைக் காண்போம்.

இலங்கை வேந்தன் இருபது தோள்இற
நலங்கொள் பாதத் தொருவிரல் ஊன்றினான்
மலங்கு பாய்வயல் சூழ்ந்த வலஞ்சுழி
வலங்கொள் வார்அடி என்தலை மேலவே.

திருமடம் கோயிலான குறிப்பு:

     திருஅழுந்தூர்த் திருப்பதிகத்தில் ஒருமடமே கோயிலாக ஆகிய
குறிப்பு விளங்குகிறது. அழுந்தை என்பது அழுந்தூர் என்பதன் மரூஉ
ஆகும். இத்தலம் கம்பர் தோன்றிய சிறப்புடையது.

     அகத்தியர் கீழே பூமியில் பூசை செய்த போது ஊர்த்துவரதன் என்ற
அரசனின் தேர் அதற்கு மேல் சென்றது. அதனால் அத்தேர் பூமியில்
அழுந்தியது. அதுகாரணமாக ஊர், தேர் அழுந்தூர் என ஆயிற்று என்று
கூறுவர்.

     இப்பதிகத்தின் எல்லாப் பாடல்களிலும், “மாமடம் மன்னினையே”
என்று சம்பந்தர் குறிக்கிறார்.

தொழுமாறு வல்லார் துயர்தீர நினைந்து
எழுமாறு வல்லார் இசைபாட விம்மி
அழுமாறு வல்லார் அழுந்தை மறையோர்
வழிபாடு செய்மா மடம்மன் னினையே

                        (தி. 2 ப. 20 பா. 1)

என்பது முதல் பாடல்.

     இதனால் இங்கு மடம் இருந்தது என்று தெரிகிறது. அகத்திய
முனிவர் பூசித்தார் என்பதனாலும் இக்கருத்து வலுப்பெறுகிறது. வரலாற்று
அறிஞர் குடந்தை திரு. என். சேதுராமன் இங்குத் திருமடம் ஒன்று
இருந்து பின் அதுவே கோயிலாக மாறியது எனக் கூறுகிறார். இது மேலும்
சிந்தித்தற்குரியது.