பக்கம் எண் :

257

     விடங்கர் எழுந்தருளியிருக்கும் தலங்கள் ஏழனுள் ஒன்று. இவர்
நீலவிடங்கர், நடனம் கமலநடனம், சூரியன் பூசித்துப் பேறு பெற்றான்.

     சைவப் பெருமக்களாகிய அப்பரும், சம்பந்தரும், திருமறைக் காட்டில்
எழுந்தருளியிருந்தபொழுது வாய்மூர் இறைவர் அப்பர் கனவில் தோன்றி
“நாம் வாய்மூரில் இருப்போம் வா” என்றனர். உடனே அப்பர் விரைவில்
எழுந்து இறைவரைத் தொடர்ந்து சென்றார். திருக்கோயிலுக்கு அருகில்
சென்றதும் இறைவர் மறைந்துவிட்டனர்.

     இதற்குள் ஞானசம்பந்தரும் அங்கு எழுந்தருள, அப்பர், “கதவைத்
திறக்கப்பாடிய என்னினும், செந்தமிழ் உறைக்கப் பாடி அதை அடைத்த
ஞானசம்பந்தப் பெருந்தகையாரும் எழுந்தருளியுள்ளார். அவர்க்குக்
காட்சியை அளிக்கவாவது வெளிப்பட்டருளவேண்டும்” என்றுபாட
அவ்வாறே வாய்மூர் இறைவர் காட்சி தந்தருளினார்.

     இத்தலத்திற்குத் திருஞானசம்பந்தர் பதிகம் ஒன்று அப்பர் பதிகங்கள்
இரண்டு, ஆக மூன்று பதிகங்கள் இருக்கின்றன. சுந்தரரும் “வாய்மூர்
மணாளனை” என்கின்றார்.

                 85. திருவாழ்கொளிபுத்தூர்

     இவ்வூர் மதுரை, இராமசுவாமிப்பிள்ளை, என்னும் ஞான சம்பந்தப்
பிள்ளையால் அச்சிடப்பெற்ற தேவாரத்தில், வாள் கொளிபுத்தூர் என்றும்,
வேறுசில பதிப்பில், வாளொளி புற்றூர் என்றும் காணப்பெறுகின்றது.
சேக்கிழார், பெரியபுராணத்தில் திருவாழ்கொளி புத்தூர் என்றே
குறித்துள்ளனர்.

     மயிலாடுதுறை-சிதம்பரம் தொடர்வண்டிப் பாதையில், நீடூர் தொடர்
வண்டி நிலையத்திற்கு வடக்கே 9 கி. மீ தூரத்தில் இருக்கிறது. இக்காலம்
மயிலாடுதுறை மணல்மேடு ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதியும்
உண்டு. வைத்தீசுவரன் கோயிலுக்கு நேர் மேற்கிலும் 10 கி. மீ. அளவே.

     இறைவர் திருப்பெயர். மாணிக்கவண்ணர். இது திருமேனியின்
ஒளிகாரணமாக ஏற்பட்ட திருப்பெயராகும். இப்பெயரைச் சுந்தரமூர்த்தி
சுவாமிகள் இவ்வூர்க்குரிய ஒவ்வொரு திருப்பாட்டிலும்,