பக்கம் எண் :

256

கல்வெட்டு:

     இக்கோயிலில் இருபத்தேழு கல்வெட்டுக்கள் படி
எடுக்கப்பட்டிருக்கின்றன. அவைகளில் ஏழு பிற்காலச் சோழர்களது. ஏழு
பாண்டியர்களுடையனவும், ஒன்று நாயக்கரது மாம். திருவாஞ்சியம்
குலோத்துங்க சோழவளநாட்டில் பனையூர் நாட்டில் திருவாஞ்சியம் எனக்
கூறப்பட்டது. இவ்வூருக்கு இராஜகம்பீர சதுர்வேதி மங்கலம் என்ற மறுபெயர்
உண்டு. நிலவிற்பனை, நிலதானம் வரி தள்ளுபடி இவைகளைப் பற்றிக்
கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இரண்டாம் இராஜராஜதேவன் கல்வெட்டு
ஒன்று கோயிலில் சேர்ந்த நிலங்களின் வரிசையைக் கூறுகிறது. இவ்வரசன்
காலத்தில் அம்மனுக்கு ஒரு கோயில் கட்டப்பட்டு, பிரதிஷ்டையும்
செய்யப்பட்டது. அப்போது நிலமும் வீடும் தானம் செய்யப்பட்டன.

     குலோத்துங்கன் காலத்தில் திருப்பள்ளியறை நாச்சியாருக்குக் கோமாங்
குடியான் ஒருவன் நிலதானம் செய்தான். மங்களாம்பாள் கோயிலில் உள்ள
ஒரு கல்வெட்டின்படி, இராஜராஜதேவன் II காலத்தில் (கி. பி. 18)
திருவாஞ்சியமுடையார் கோயிலில் அம்மனுக்கு ஒரு கோயில்கட்டிப்
பிரதிட்டை செய்யப் பட்டது. அப்போது நிலம் வீடுகள் தானம்
செய்யப்பட்டன. ஒரு நிலத்தில் இருந்த கல்வெட்டின்படி, சிதம்பரத்துப்
பிச்சை மடத்து அகோர சிவாசாரியார் சீடர் அச்சுற்றமங்கலத்துப்
பெருமாநாயனார் பண்டாரம் அம்மடத்திற்கு முண்டு வான்சேரியி ஒரு வேலி
நிலம் வாங்கியதாகக் கூறப் பெற்றுள்ளது.

                    84. திருவாய்மூர்

     இது திருக்குவளை என்று இக்காலம் வழங்கும். திருக்கோளிலிக்குத்
தென்கிழக்கே 3 கி. மீ. தூரத்தில் இருக்கின்றது. இது காவிரித் தென்கரைத்
தலங்களுள் ஒன்றாகும். திருவாரூரிலிருந்து திருக்குவளை வழியாக
வேதாரணியம் செல்லும் பேருந்துகளில் செல்லலாம்.

     இறைவர் திருப்பெயர் வாய்மூர்நாதர். இறைவியார் திருப்பெயர்
பாலினுநன்மொழியாள்.

     தீர்த்தம் சூரியதீர்த்தம். இது கோயிலுக்கு எதிரில் இருக்கிறது.

     தலவிருட்சம் பலா.