பக்கம் எண் :

299

1506.



மண்ணி னிற்புகழ் பெற்றவர் மங்கையர் தாம்பயில்
திண்ணெ னப்புரி சைத்தொழி லார்திரு வான்மியூர்த்
துண்ணெ னத்திரி யுஞ்சரி தைத்தொழி லீர்சொலீர்
விண்ணி னிற்பிறை செஞ்சடை வைத்த வியப்பதே.   5
1507.



போது லாவிய தண்பொழில் சூழ்புரி சைப்புறம்
தீதி லந்தண ரோத்தொழி யாத்திரு வான்மியூர்ச்
சூது லாவிய கொங்கையொர் பங்குடை யீர்சொலீர்
மூதெ யில்லொரு மூன்றெரி யூட்டிய மொய்ம்பதே.   6


     5. பொ-ரை: உலகோரால் புகழப்பெறும் குணநலங்களை உடைய
மகளிரையும், உறுதியான வேலைப்பாடுகள் பொருந்திய மதில்களையும்
உடைய திருவான்மியூரில் எல்லோரும் வியப்படையும் வண்ணம் பலியேற்கும்
தொழிலை மேற்கொண்டு உறைபவரே, நீர் வானத்தில் விளங்கும்
வெண்பிறையை உம் செஞ்சடை மேல் வைத்துள்ள வியப்புடைச் செயலை
ஏன் செய்தீர்? சொல்வீராக.

     கு-ரை: திருவான்மியூர் மங்கையர் கற்பு முதலியவற்றாலும்
சிவபக்தியாலும் உலகம் புகழப்பெற்றிருந்தனர். அவ்வூர் மதில் உறுதியும்
வேலைப்பாடும் நிறைந்தது. திண்ணெனல் - உறுதிப்பாடு, புரிசை - மதில்,
தொழில்-வேலைப்பாடு, ஆர்தல் - நிறைதல் துண்ணெனல் - குறிப்புமொழி,
திரியுஞ்சரிதைத் தொழில் - பிக்ஷையேற்கச் செல்லுந்தொழில் (சிந்தாமணி
3072. 3உரை) இதில் பா.9-இன் வினாக்காண்க. பிறை-பிறத்தலுடையது.
பிறைசூடியதை வினாவினார். செஞ்சடை என்றதால் வெண்பிறை எனக்
கொள்ள வைத்தார். விண்பிறையைச் செஞ்சடையில் வைத்தது வியஇப்பாதல்
அறிக.

     6. பொ-ரை: மலர்கள் நிறைந்த குளிர்ந்த பொழில்கள் சூழ்ந்ததும்,
மதில்களைப் புறத்தே உடையதும், குற்றமற்ற அந்தணர்கள் வேதம்
ஓதுதலை இடையறாது உடையதுமாகிய திருவான்மியூரில் சூதாடு கருவி
போன்ற வடிவுடைய தனங்களைக் கொண்ட உமையம்மையை ஒரு பாகமாகக்
கொண்டு எழுந்தருளியிருப்பவரே! பழமையான முப்புரங்களை எரிசெய்து
அழித்த உமது வீரச் செயலுக்குக் காரணம் யாதோ? சொல்வீர்.

     கு-ரை: போது - பூக்கும் பருவத்தது. பொழில் - சோலை.