1541.
|
அரவம்
பூண்பரணி யுஞ்சிலம்
பார்க்க வகந்தொறும்
இரவி னல்லபலி பேணுவர்
நாணிலர் நாமமே
பரவு வார்வினை தீர்க்கநின்
றார்திரு வாஞ்சியம்
மருவி யேத்தமட மாதொடு
நின்றவெம் மைந்தரே. 6 |
1542.
|
விண்ணி
லானபிறை சூடுவர்
தாழ்ந்து விளங்கவே
கண்ணி னாலநங் கன்னுட
லம்பொடி யாக்கினார்
பண்ணி லானவிசை பாடன்மல்
குந்திரு வாஞ்சியத்
தண்ணலார் தம்மடி போற்றவல்
லார்க்கில்லை யல்லலே. 7 |
6.
பொ-ரை: அரவை அணிகலனாகப் பூண்பவர்; காலில் அணியும்
சிலம்பு ஆரவாரிக்க வீடுகள் தோறும் நாணிலராய் இரவிற் சென்று நல்ல
பலியைப் பெறுபவர்; தம் திருப் பெயர்களைக் கூறிப் பரவுவார்
வினைகளைத் தீர்க்கத் திருவாஞ்சியத்துள் நாம் சென்று வழிபடுமாறு
உமையம்மையாரோடு எழுந்தருளியுள்ளார்.
கு-ரை:
அரவம் - பாம்பு, பூண்பர் - சூடுவர். அணியுஞ்சிலம்பு
-அலங்காரமாகப்பூணும் வேதச்சிலம்பு. ஆர்க்க - ஒலிக்க. அகம் - வீடு
பேணுவர் - விரும்புவர். நாமமே பரவுவார் - திருநாமஜபமே செய்பவர்.
வினை-கர்மம். மடமாது - உமா தேவியார். மைந்தர் - வீரர்.
7.
பொ-ரை: வானகத்தே தோன்றிய பிறைமதியைத் தம் திருமுடியில்
தங்கி விளங்குமாறு சூடியவர்; நெற்றிக் கண்ணால் மன்மதனின் உடலை
நீறாக்கியவர். பண்களில் பொருந்திய இசையோடு பாடும் புகழ்பொருந்திய
திருவாஞ்சியத்துள் விளங்கும் அவ்வண்ணலாரின் திருவடியைப்
போற்றவல்லார்க்கு அல்லல் இல்லை.
|