பக்கம் எண் :

403

1665.



வயஞா னம்வல்லார் மருகற் பெருமான்
உயர்ஞா னமுணர்ந் தடியுள் குதலால்
இயன்ஞா னசம்பந் தனபா டல்வல்லார்
வியன்ஞா லமெல்லாம் விளங்கும் புகழே. 11

திருச்சிற்றம்பலம்


     11. பொ-ரை: தன்மயமாக்கும் திருவருள் ஞானம் பெற்றார் வாழும்
மருகற் பெருமான் திருவடிகளை உயர்ஞானம் உணர்ந்து நினைதலால் பதி
இயல்புற்ற ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களைப் பாடவல்லார்
புகழ், அகன்ற இவ்வுலக மெல்லாம் விளங்கித் தோன்றும்.

     கு-ரை: வயஞானம் - தன்வயமாக்கிய திருவருண் ஞானம்.
அருள்வயமான நல்லோர் வாழும் மருகல் என்க.

          திருஞானசம்பந்தர் புராணம்

சடையானை எவ்வுயிர்க்குந் தாயா னானைச்
     சங்கரனைச் சசி கண்ட மவுலி யானை
விடையானை வேதியனை வெண்ணீற் றானை
     விரவாதார் புரமூன்றும் எரியச் செற்ற
படையானைப் பங்கயத்து மேவி னானும்
     பாம்பணையில் துயின்றானும் பரவுங் கோலம்
உடையானை உடையானே தகுமோ இந்த
     ஒள்ளிழையாள் உள்மெலிவென் றெடுத்துப் பாட.
பொங்குவிடந் தீர்ந்தெழுந்து நின்றான் சூழ்ந்த
     பொருவில்திருத் தொண்டர்குழாம் பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின் மேற் குவித்துக் கொண்டங்
     கருட்காழிப் பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கை அவள் தனைநயந்த நம்பி யோடு
     நானிலத்தில் இன்புற்று வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலி புகலி வேந்தர்
     மணம்புணரும் பெருவாழ்வு வகுத்து விட்டார்.

- சேக்கிழார்.