பக்கம் எண் :

527

1882.



ஊத்தை வாய்ச்சமண் கையர்கள் சாக்கியர்க் கென்றும்
ஆத்த மாக வறிவரி தாயவன் கோயில்
வாய்த்த மாளிகை சூழ்தரு வண்புகார் மாடே
பூத்த வாவிகள் சூழ்ந்து பொலிந்தசாய்க் காடே.     10
1883.



ஏனை யோர்புகழ்ந் தேத்திய வெந்தைசாய்க் காட்டை
ஞான சம்பந்தன் காழியர் கோனவில் பத்தும்
ஊன மின்றி யுரைசெய வல்லவர் தாம்போய்
வான நாடினி தாள்வரிம் மானிலத் தோரே.         11

                      திருச்சிற்றம்பலம்


     கு-ரை: வேலை-கடல். நேர்-ஒத்த. செருந்தி. கனகம் (-பொன்)
போலப்- பூப்பது. ஆறு சாமத்திலும் பூக்கும் வெவ்வேறு இனங்களுள்
காலையிற் பூப்பது செருந்தி, ‘நாண்மலர்’ (நாள்-காலை) என்னும் தொல்
வழக்குணர்க. ‘அல்லி’ அல்லிற்பூப்பது பற்றிய காரணப்பெயர்.

     10. பொ-ரை: அழுக்கேறிய வாயினை உடைய சமணர்களாகிய கீழ்
மக்களுக்கும் சாக்கியர்களுக்கும் எக்காலத்தும் அன்புடையனாதலின்றி
அறிதற்கும் அரிதாயிருப்பவனது கோயில், ஏற்புடைய மாளிகைகள் சூழ்ந்த
புகார் நகரின் அருகே பூத்துள்ள மலர் வாவிகள் சூழ்ந்து பொலியும்
சரய்க்காடாகும்.

     கு-ரை: ஆத்தம்-ஆப்தம், உண்மை. அறிவு அரிது ஆயவன்-
அறிவதற்கு அரிய உண்மைப் பொருளாயுள்ளவன். புகார்க்கு அருகில்
சாய்க்காடு இருத்தல் கூறப்பட்டதறிக. புகார்க்கு மாளிகையும் காட்டுக்கு
வாவிகளும் விசேடம். புகாஆறு என்றதன் மரூஉவே புகார் என்பது. இதன்
முதற்பாட்டில் ‘பொன்னி சாகரம் மேவு’ என்றதற்கு எழுதிய குறிப்பைக்
காண்க.

     11. பொ-ரை: சமண பௌத்தர்கள் அன்றி ஏனையோர் புகழ்ந்து
ஏத்தும் எம்தந்தையாகிய இறைவர் விளங்கும் சாய்க்காட்டை, காழியர்
கோனாகிய ஞானசம்பந்தன் போற்றிப் பாடிய இப்பதிகப்பாடல்கள்
பத்தையும் குற்றமற்றவகையில் உரைசெய்து வழிபட வல்ல இம்மாநிலத்தோர்
வான நாடு சென்று இனிதாக அரசாளுவர்.