பக்கம் எண் :

567

44. திருவாமாத்தூர்

பதிக வரலாறு;

      திருவதிகை வீரட்டத்தை வழி பட்ட திருஞானசம்பந்தப் பெருமானார்
திருவாமாத்தூர் அணைந்து பாடியவற்றுள் இத்திருப்பதிகமும் ஒன்று.

பண்: சீகாமரம்

ப.தொ.எண்: 180 பதிக எண்: 44

திருச்சிற்றம்பலம்

1939.



துன்னம்பெய் கோவணமுந் தோலு முடையாடை
பின்னஞ் சடைமேலோர் பிள்ளை மதிசூடி
அன்னஞ்சேர் தண்கான லாமாத்தூ ரம்மான்றன்
பொன்னங் கழல்பரவாப் பொக்கமும் பொக்கமே. 1
1940.



கைம்மாவின் றோல்போர்த்த காபாலி வானுலகில்
மும்மா மதிலெய்தான் முக்கணான் பேர்பாடி
அம்மா மலர்ச்சோலை யாமாத்தூ ரம்மானெம்
பெம்மானென் றேத்தாதார் பேயரிற் பேயரே.     2


     1. பொ-ரை: தைத்தல் அமைந்த கோவணத்தை உடையாகவும்,
யானைத் தோலைமேல் ஆடையாகவும் கொண்டு பின்னிய சடைமீது
இளம்பிறையைச் சூடி, அன்னங்கள் வாழும் குளிர்ந்த சோலைகளைக்
கொண்டுள்ள திருஆமாத்தூரில் விளங்கும் இறைவனின் பொன் போன்ற
அழகிய திருவடிகளைப் பரவாதவர் பொலிவு பொலிவாகுமா?

     கு-ரை: துன்னம்-தைத்தல். பெய்-செறிந்த, இட்ட பெய் கோவணம்;
வினைத்தொகை. பின்-பின்னிய. அம்-அழகிய. பொக்கம்-பொலிவு.
பொலிவும் ஒரு பொலிவோ? பொலிவு அன்று என்க. பா.5,9,10, பார்க்க.

     2. பொ-ரை: யானைத் தோலைப் போர்த்துள்ள காபாலியும்,
வானுலகில் திரிந்து இடம் விளைத்த முப்புரங்களை எய்தழித்தவனும்,