பக்கம் எண் :

670

நல்லார்க ளந்தணர்கள்
     நாளுமேத்துந் திருநல்லூர்
மல்லார்ந்த கோயிலே
     கோயிலாக மகிழ்ந்தீரே.        10
2091.







கொந்தணவும் பொழில்புடைசூழ்
     கொச்சைமேவு குலவேந்தன்
செந்தமிழின் சம்பந்தன்
     சிறைவண்புனல்சூழ் திருநல்லூர்ப்
பந்தணவு மெல்விரலாள்
     பங்கன்றன்னைப் பயில்பாடல்
சிந்தனையா லுரைசெய்வார்
     சிவலோகஞ்சேர்ந் திருப்பாரே.   11

                     திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: பொல்லாத சமணர்களோடு புறங்கூறும் சாக்கியர்
என்ற ஒன்றிலும் சேராதார் கூறும் அறவுரைகளை விட்டு அடியவர்கள்
வந்து வழிபடுதல் நீங்காததும், நல்லவர்களாகிய அந்தணர்கள் நாளும்
வந்து வழிபடுவதும் ஆகிய திருநல்லூரில் மலையில் விளங்கும்
கோயிலையே தன் கோயிலாகக் கொண்டு மகிழ்கின்றீர்.

     கு-ரை: பொல்லாத - தீய. அறவுரை-இகழ்ச்சிக் குறிப்பு. போற்று-துதி.
ஓவா-நீங்காத. மல்-மலை. ‘மற்பகமலர்ந்த திண்டோள் வானவர்’ (கம்பர்,
பால: உரைக்காட்சிப். 52). ‘மல்லினும் உயர் தோளாய் மலரடிபிரியாதேன்’
(ஷகங்கைப்-66).

     11. பொ-ரை: பூங்கொத்துக்கள் செறிந்த பொழில்புடை சூழ்ந்த
கொச்சைவயம் என்னும் சீகாழியில் உயர் குலத்தில் தோன்றிய
தலைவனாகிய செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் மடையில் சிறைப்படுத்திய
வண்புனல் சூழ்ந்த திருநல்லூரில் பந்து பொருந்தும் மெல்விரலாள்
பங்கனைப் போற்றிப் பாடிய இப்பதிகப் பாடல்களைச் சிந்தையோடு ஒன்றி
உரைப்பவர் சிவலோகம் சேர்ந்து இனிதிருப்பர்.

     கு-ரை: கொந்து-பூங்கொத்து. புடை-பக்கம். கொச்சை-சீகாழி.
செந்தமிழில் மறைப்பொருளை அருளியதால் ‘செந்தமிழின் சம்பந்தன்’
என்னும் உரிமை உண்டாயிற்று. சிறை-அணை. ‘பந்தார் விரலி’ என்னும்
அம்பிகையின் திருப்பெயரை நினைக்க. சிந்தனையால் - தியானத்தோடு.