பக்கம் எண் :

673

58. திருக்குடவாயில்

பதிக வரலாறு:

     தமிழ்விரகர் திருவிரும்பூளை, திரு அரதைப்பெரும்பாழி, திருச்சேறை,
திருநாலூர் என்னும் தலங்களை வழிபட்டுத் திருக்குடவாயிலை அடைந்தார்.
அங்கு அருளிய திருப்பதிகங்களுள் இதுவும் ஒன்று.

                   பண்: காந்தாரம்

ப.தொ.எண்: 194                               பதிக எண்: 58

திருச்சிற்றம்பலம்

2092.







கலைவாழு மங்கையீர்
      கொங்கையாருங் கருங்கூந்தல்
அலைவாழுஞ் செஞ்சடையி
      லரவும்பிறையு மமர்வித்தீர்
குலைவாழை கமுகம்பொன்
      பவளம்பழுக்குங் குடவாயில்
நிலைவாழுங் கோயிலே
      கோயிலாக நின்றீரே.          1

     1. பொ-ரை: மான் வாழும் கையினை உடையவரே! மணம்
பொருந்திய கரிய கூந்தலை உடைய கங்கை தங்கிய செஞ்சடையில்
பாம்பையும் பிறையையும் அணிந்தவரே! வாழை, குலைகளைத் தந்தும்,
கமுகு பொன்னையும் பவளத்தையும் போலப் பழுத்தும் பயன் தந்தும்
வளம் செய்யும் குடவாயிலில் நிலைத்து விளங்கும் கோயிலை நீர்
விரும்பும் கோயிலாகக் கொண்டுள்ளீர்.

     கு-ரை: கலை-ஆண் மான். புல்வாய்க்கே அன்றிக் ‘கலையென்
காட்சி உழைக்கும் உரித்து’ (தொல், மரபியல். 42-3). கொங்கு-மணம்.
பூந்தாது, தேன். கூந்தல் அலை-கூந்தலை உடைய அலைமகளாகிய
கங்கை.

     கமுகம்-பாக்கு. பொன் பவளம் பழுக்கும்-பொன்னையும் பவளத்தையும்
போலப் பழுக்கும். நிலை-குடவாயில் நிலை. குடவாயிலாகிய நிலையில்.