பக்கம் எண் :

85

                 இரண்டாவது திருமுறையில் உள்ள
                           தலங்களின்

                  வரலாற்றுக் குறிப்புக்கள்1

                    1. திரு அகத்தியான்பள்ளி

     வேதாரணியத்திற்குத் தெற்கே 2 கி.மீ தூரத்தில் இருக்கின்றது. இது
சோழ நாட்டுக் காவிரித் தென்கரைத் தலங்களுள் 126ஆவது தலம்.
வேதாரணியத்திலிருந்து கோடியக்கரை செல்லும் பேருந்தில் சென்றால்
இத்தலத்தை அடையலாம்.

     திருக்கயிலையில் வீற்றிருக்கும் அருட்கடலாகிய சிவபெருமானது
திருமணக்கோலக் காட்சியைக் காணும்பொருட்டு அகத்தியர் தங்கித்
தவஞ்செய்த பதியாதலின் அகத்தியான்பள்ளி என்னும் பெயர் பெற்றது
என்பர்.

     இறைவர் திருப்பெயர்: அகத்தீசுவரர். இறைவி திருப்பெயர்:
பாகம்பிரியாள் நாயகி. சுவாமி சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.
அம்பாள் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அகத்தியர்கோயில்
மூலத்தானத்திற்கு மேற்கில் உள்ளது. பழையவேலை செங்கல்லால். புதிய
வேலை கருங்கல்லால் இயன்றது. அம்மன் உருவம் சிறியது. கோயில்
முப்பது ஆண்டுகளுக்கு முன் புதுப்பிக்கப்பட்டது.

     1. அகத்தியதீர்த்தம். இது அகத்தீசுவரர் திருக்கோயிலுக்கு
அண்மையில் மேல்புறத்துள்ளது. 2, அக்நிதீர்த்தம். இது அகத்தீசுவரர்
சந்நிதிக்குக் கிழக்கே சுமார் ஒருமைல் தூரத்திலுள்ள சமுத்திரதீர்த்தமாகும்.
3. அக்நிபுட்கரிணி. இது அகத்தீசுரர் சந்நிதியில் உள்ள தீர்த்தம்.
4. எமதருமதீர்த்தம். இதுவ அக்நிபுட்கரிணிக்கு வடக்கேயுள்ளது. வன்னி
தலவிருட்சம்.


     1இக்குறிப்புக்கள், கோயமுத்தூர் திரு. சி. எம். இராமச்சந்திர
செட்டியார் B.A., அவர்களும், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின்
புலவர் திரு. வை. சுந்தரேச வாண்டையார் அவர்களும் எழுதியுதவியன.