பக்கம் எண் :

90

     விக்கிரமசோழன் காலத்தில், அத்திருக்கோயிலில் ஆளுடைய
நாயகரையும் அம்மையாரையும் எழுந்தருளுவித்தவன், க்ஷத்திரிய சிகாமணி
வளநாட்டுச் சிறுவேளூரான் அமுதன் திருச்சிற்றம்பலமுடையான்
உதயமார்த்தாண்ட மூவேந்த வேளான் ஆவான். இக்கோயிலில் இருக்கும்
திருச்சுற்றுமாளிகை விக்கிரம சோழனால் கட்டப்பட்டதாகும். இச்செய்தி
“ஸ்வஸ்திஸ்ரீ இத்திருமாளிகை விக்கிரமசோழன்” என்னும் கல்வெட்டால்
அறியலாகும்.

     இறைவர் திருமாகாளம் உடையார். திருமாகாளத்து மகாதேவர் என்னும்
பெயர்களால் வழங்கப்படுகின்றார். இத்திருக்கோயிலுக்கு, புரவுவரி வளாகம்,
வேதத்தூர், எயினிகுடி என்னும் ஊர்கள் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளன.
இத்திருக்கோயிலில் உமாமகேசுவரிக்குத் தனிக்கோயிலை எடுப்பித்தவன்
விக்கிரமசோழ மன்னனாவன்.1

                   3. திரு அரசிலி

     அரசமரத்தை இறைவன் இல்லாக உடைமையின் இப்பெயர்
பெற்றது என்பர். இது இக்காலம் ஒழிந்தியாப்பட்டு என்று மக்களால்
வழங்கப்பெறுகின்றது.

     பாண்டிச்சேரி-திண்டிவனம் (வழி கிளியனூர்) பேருந்தில்
ஒழிந்தியாப்பட்டு கைகாட்டி அருகில் இறங்கி கிழக்கே 2. கி. மீ சென்றால்
அரசிலி ஆலயத்தை அடையலாம். இது தொண்டை நாட்டுப்பதியாகும்.

     இறைவரின் திருப்பெயர் அரசிலி நாதர். இறைவியாரின் திருப்பெயர்
பெரியநாயகி. இறைவன் திருப்பெயர் திரு அரசிலி ஆளுடையார்
ஆலாலசுந்தரர் என்றும், திரு அரசிலி ஆளுடையார் என்றும்
குறிக்கப்பெற்றுள்ளது.

     இவ்வூர்க் கல்வெட்டுக்கள் அனைத்தும், சந்திவிளக்குகளுக்கும்
திருநுந்தா விளக்குகளுக்கும் ஆடுகள் விடப்பட்ட செய்திகளை
உணர்த்துகின்றன.

     வாமதேவ முனிவர் பூசித்துப் பேறுபெற்றது. இத்தலத்திற்குத்
திருஞானசம்பந்தர் பாடிய பதிகம் ஒன்று உள்ளது. இங்குள்ள தீர்த்தம்
அரசடித் தீர்த்தம். குளம் பெரியது.