கல்வெட்டு:
இத்திருக்கோயிலில்
உள்ள ஐந்து கல்வெட்டுக்கள் அரசியலாரால்
படியெடுக்கப்பெற்றுள்ளன. இவற்றுள் விக்கிரம சோழதேவர், குலோத்துங்க
சோழதேவர் ஆகிய இருவரும் குறிப்பிடப் பெற்றுள்ளனர். விக்கிரம
சோழதேவரின் ஆறாவது ஆண்டுக் காலத்தில் இவ்வூர் ஜயங்கொண்ட
சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய இராஜேந்திர சாழவளநாட்டுப்
பெருவேம்பூர் நாட்டுத் தேவதானம் திருவரைசிலி என்றும், பன்னிரண்டாவது
ஆட்சியாண்டில் ஓய்மாநாட்டுத் திருவரசிலி என்றும், பதினாறாவது
ஆட்சியாண்டில் ஜயங்கொண்ட சோழ மண்டலத்து ஓய்மாநாடான விஜய
இராஜேந்திர சோழவளநாட்டுப் பெருவேம்பூர் நாட்டுத் திருவரசிலி என்றும்
குறிக்கப் பெற்றுள்ளமையால், முன் இருந்த பெயர் மாற்றப்பட்டு, பின்னும்
அதேபெயர் இடப்பட்டமை, யாது காரணத்தாலோ அறியக்கூடவில்லை.
ஒரே கல்வெட்டுடைய குலோத்துங்கனது ஐந்தாவது ஆட்சியாண்டில்
ஜயங்கொண்ட சோழமண்டலத்து ஓய்மா நாடான விஜய இராஜேந்திர
சோழவளநாட்டுத் தனியூர் தேவதானம் திருவரசிலி எனவும்
குறிக்கப்பெற்றுள்ளது.
திருவிரும்பை
உடையார் திருமாகாளமுடைய நாயனார் கோயிலில்
உள்ள கோமாறபன்மரான திரிபுவன சக்கிரவர்த்தி ஸ்ரீ விக்கிரமபாண்டிய
தேவரின் இரண்டாவது ஆட்சியாண்டில் பொறிக்கப்பெற்ற கல்வெட்டில்,
இவ்வூர் (அரசிலி) ஜயங்கொண்ட சோழமண்டலத்து மாத்தூர்நாட்டு
ஒழுகறையான குலோத்துங்க சோழ நல்லூர் திருஅரசிலி உடையார் ஆலால
சுந்தரனார் எனக் குறிக்கப் பெற்றுள்ளது. ஒழுகறை என்னும் பெயரே
பிற்காலத்தில் ஒழிந்தியாப்பட்டு என்று வழங்கலாயிற்று என்பர்.
பெருங்கொடை
வள்ளலும், பத்துப் பாட்டினுள் மூன்றாவதாகிய
சிறுபாணாற்றுப் படைத் தலைவனுமாகிய நல்லியக் கோடன்;
ஓய்மாநாட்டினன் ஆவன். அரசிலி ஓய்மாநாட்டைச் சேர்ந்தது. அது
தென்னார்க்காடு மாவட்டம் திண்டிவனம் வட்டத்தில் இருக்கின்றதால்
அப்பிரதேசம் ஓய்மாநாடாகும்.1
1See
the Annual Reports on South Indian Epigraphy for the
year 1902, Numbers 194-198.
See
also South Indian Inscriptions, Volume VII No. 821-825.
|