பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)85. திருவீழிமிழலை1053

அந்தணர்கள் வசிக்கின்றதும், அழகிய சோலைகள் விளங்குவதுமான
திருவீழிமிழலை என்னும் திருத்தலத்தைப் போற்றி, நிலைபெற்ற புகலியில்
அவதரித்த ஞானசம்பந்தன் வண்தமிழால் அருளிய இத்திருப்பதிகத்தை
ஓதுபவர்கள் இம்மையில் துயரற்றவராவர். மறுமையில் வீடுபேறடைவர்.

     கு-ரை: உன்னிய - (இறைவன் மொழியென்று) கருதப்பட்ட அருமறை
யொலியினை, உதாத்தம், அநுதாத்தம், சுவரிதம் என்னும் ஒலியை
முறைமைமிக்க பாடல்களாகப்பாடுகின்ற, இனிய இசையையுடைய அந்தணர்
வாழும் என்பது. முறை... ... உறை - என்பதன் பொருள். இம்மையில் வரும்
துயர் எதுவும் இல்லாதவராய், மறுமையில் முத்தியுலகெய்துவரென்பது
இறுதிப்பகுதியின் பொருள்.

ஆளுடைய பிள்ளையார் திருவுலாமாலை

மாயிரு ஞாலத்து மன்னா வடுதுறைபுக்
காயிரஞ் செம்பொ னதுகொண்டும் - மாய்வரிய
மாண்புதிகழ் எம்பெருமான் மன்னுதிரு வோத்தூரில்
ஆண்பனைகள் பெண்பனைகள் ஆக்கியும் - பாண்பரிசிற்
கைப்பாணி ஒத்திக்கா ழிக்கோலக் காவிற்பொற்
சப்பாணி கொண்டு தராதலத்துள் - எப்பொழுதும்
நீக்கரிய இன்பத் திராகம்இருக் குக்குறள்
நோக்கரிய பாசுரம்பல் பத்தோடும் - ஆக்கரிய
யாழ்மூரி சக்கரமாற் றீரடி முக்காலும்
பாழிமையாற் பாரகத்தோர் தாம்உய்ய - ஊழி
உரைப்பமரும் பல்புகழால் ஓங்கஉமை கோனைத்
திருப்பதிகம் பாடவல்ல சேயை.

                          -நம்பியாண்டார் நம்பி.