பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)86. திருச்சேறை1061

3731. பன்றியர் பறவையர் பரிசுடை வடிவொடு
       படர்தர
அன்றிய வவரவ ரடியொடு முடியவை
     யறிகிலார்
நின்றிரு புடைபட நெடுவெரி நடுவெயொர்
     நிகழ்தரச்
சென்றுயர் வெளிபட வருளிய வவர்நகர்
     சேறையே.                           9


     9. பொ-ரை: திருமால் பன்றி உருவெடுத்தும், பிரமன் அன்னப்பறவை
உருவெடுத்தும் இறைவனைக் காணமுயல, அவ்விருவரும் தன் அடியையும்,
முடியையும் அறியாவண்ணம் அவர்கள் நடுவே நெடிய நெருப்புப் பிழம்
பாய்த் தோன்றுமாறு, ஓங்கி, தன் மேலாந்தன்மை வெளிப்பட அருளிய
சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் திருச்சேறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: பரிசு உடை தமக்கு ஏற்ற தன்மையையுடைய. வடிவோடு -
வடிவங்களுடனே, பன்றியர் - பன்றியானவனும். பறவையானவனும் ஆகிய
திருமாலும் பிரமனும். (பன்றியன், பறவையன் என ஒருமையாற் கூறற்பாலது.)
பன்மையாற்கூறியது; இழிப்புப்பற்றி, அவர் அவர் என்பதும் அது. (படர்தர
- காணச் செல்ல). அன்றிய - மாறுபட்ட. அவர் - அத்திருமாலும். அவர் -
அப்பிரமனும் (அன்றிய - இப்பொருட்டாதலை” அன்றினார் புரமெரித்தார்க்
காலயமெடுக்க எண்ணி” என்னும் (தி.12 பூசலார். புரா. 1.) எண்ணத்தாலும்,
சிவஞான சித்தியார் சூ 1.42 உரையாலும் அறிக. அடியொடும். முடி அவை
- அடியும் முடியுமாகிய அவற்றை. அறிகிலார் - அறிய முடியாதவராகி.
நின்று இரு புடைபட - இருபுடை பட்டு நிற்க என எச்சவிகுதி பிரித்துக்
கூட்டுக. இருபக்கமும் பொருந்தி நிற்க என்றபடி - நடுவே - நடுவே. நெடு
- நெடிய. எரி - நெருப்புப் பிழம்பாய், நிகழ்தரச்சென்று - தோன்றுமாறு
ஓங்கி. உயர் - (யார்) மேலானவர் என்பது. வெளிபட அருளிய -
வெளியாகும் வண்ணம் திருவுளங்கொண்ட. அவர் - அந்தச் சிவபெருமான்,
நகர் சேறையே என்க. உயர்வு என்பதின் பண்புப்பெயர் விகுதி கெட்டது.
உயர்வு - உயர்ந்தவரெனப் பொருள்தரலாற் பண்பாகு பெயர்.