பக்கம் எண் :

1146திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3840. நீக்கிய புனலணி நெல்வெணெய் மேவிய
  சாக்கியச் சமண் கெடுத் தீரே
சாக்கியச் சமண்கெடுத் தீருமைச் சார்வது
பாக்கிய முடையவர் பண்பே.                10

3841. நிலமல்கு தொல்புகழ் நெல்வெணெ யீசனை
  நலமல்கு ஞானசம் பந்தன்
நலமல்கு ஞானசம் பந்தன் செந்தமிழ்
சொலமல்கு வார்துய ரிலரே.                 11

 திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: வறுமை, பிணி முதலியவற்றை நீக்கியவரும்,
திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவரும்,
புத்தமும், சமணமும் கெடுத்தவருமாகிய சிவபெருமானே! அவ்வாறு புத்தமும்,
சமணமும் கெடுத்த உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது புண்ணியம்
செய்தவர்களின் பண்பாகும்.

     கு-ரை: நீக்கிய - வறுமை, பிணி முதலியவற்றை நீக்கிய, புனல் அணி
- நீர் வளம் உடைய. நெல் வெண்ணெய் சாக்கியச்சமண் - சாக்கியரோடு
கூடிய சமண். உம்மைப் பற்றுக்கோடாகச் சார்வது, பாக்கியம் உடையவர்
பண்பு - “தவமும் தவ முடையார்க்காகும்,” (குறல். 262) “சைவமாம் சமயம்
சாரும் ஊழ்பெறல் அரிது” (சித்தியார். சுபக்கம் சூ.2.91) என்ற கருத்து.

     11. பொ-ரை: நிலவுலகெங்கும் நிறைந்த தொன்மையான
புகழையுடைய திருநெல்வெண்ணெய் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானைப் போற்றி, நன்மைகளைத் தருகின்ற
ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப் பதிகத்தைப் பாடுவதில் மகிழ்ச்சி
மிக்கவர்கள் துன்பம் இல்லாதவர்கள் ஆவர்.

     கு-ரை: ஞானசம்பந்தன செந்தமிழ், சொல மல்குவார் - சொல்வதில்
மகிழ்ச்சி மிக்கவர்: - மகிழ்ச்சிமிக்குச் சொல்வோர். (துயர் இலர் ஆவர்).