பக்கம் எண் :

1184திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3896. கள்ளி யிடுதலை யேந்துகை யர்கரி
       காடர் கண்ணுதலர்
வெள்ளிய கோவண வாடை தன்மேல்
     மிளிரா டரவார்த்து
நள்ளிரு ணட்டம தாடுவர் நன்னல
     னோங்கு நாரையூர்
உள்ளிய போழ்தி லெம்மேல் வருவல்
     வினையாயின வோடுமே.                7


பரமேட்டி - மேலான இடத்தில் உள்ளவன், மேலான யாக சொரூபியாய்
உள்ளவன் எனினுமாம். தார் உறும் மார்பு உடையான் - மாலைகள் அணிந்த
மார்பை யுடையவன். மலையின் தலைவன் - கைலை மலையின் தலைவன்.
"உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை" என்றதனால் (தொல். பொருள்.274)
மலை என்ற அளவில் கைலையைக் குறிப்பதறிக. மலைமகளைச் சீர் உறும் -
உமாதேவியாரைச் சிறப்போடு தழுவியிருக்கும். சீர் உறும் - மூன்றம் உருபும்
பயனும் தொக்க தொகை. திருநாரையூர் - மறுகில் சிறைவண்டு அறையும்,
பூசி எஞ்சிய கலவைகளை வீதியிற் கவிழ்த்தலால் அவற்றில் வண்டுகள்
ஒலிக்கும், திருநாரையூர் என்க. இனிப் புலவியிலெறிந்த பூ மாலைகளில்
வண்டுகள் மொய்த்து ஒலித்துலுங்கொள்க.

     7. பொ-ரை: சிவபெருமான் கள்ளிச் செடிகள் நிறைந்த சுடுகாட்டில்
இடப்பட்ட மண்டையோட்டை ஏந்திய கையையுடையவர். சுடுகாட்டில்
இருப்பவர். நெற்றிக் கண்ணர். வெண்ணிறக் கோவண ஆடையை அணிந்து,
அதன்மேல் ஒளிரும், ஆடுகின்ற பாம்பைக் கச்சாகக் கட்டி நள்ளிருளில்
நடனமாடுபவர். நல்ல நலன்களை எல்லாம் மேன்மேலும் பெருகத் தருகின்ற
திருநாரையூர் என்னும் திருத்தலத்தில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற
சிவபெருமானை நினைத்த மாத்திரத்தில் எம்மேல் வருகின்ற வலிய
வினைகள் யாவும் ஓடிவிடும்.

     கு-ரை: கள்ளி - கள்ளிகளையுடைய மயானத்தில். "கள்ளி
முதுகாட்டிலாடி கண்டாய்" (தி.6.ப.23.பா.4.) இடு - இடப்பட்ட.
தலையேந்துகையர். கரிகாடர் - "கோயில் சுடுகாடு" (தி.8 திருச்சாழல் -3)
ஆகவுடையவர். வெள்ளிய கோவண ஆடை "தூவெளுத்த கோவணத்தை
அரையிலார்த்த கீளானை" (தி.6.ப.67.பா.1.) நன்னலன் (நல்+நலன்) நல்ல
நலங்கள். உள்ளிய போழ்தில் - நினைத்த மாத்திரத்தில். வல்வினை ஓடும் -
ஒளியைக் கண்ட இடத்து இருள் போல ஓடும்.