4005. |
பல்லிலோட்டினர்
பலிகொண்டுண்பவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
தெல்லியாட் டுகந்தார்
இவர்தன்மை யறிவாரார். 5 |
4006. |
பச்சைமேனியர்
பிச்சைகொள்பவர் |
|
பட்டினத்துறை
பல்லவனீச்சரத்
திச்சையா யிருப்பார்
இவர்தன்மை யறிவாரார். 6 |
5.
பொ-ரை: சிவபெருமான் பற்களே இல்லாத மண்டையோட்டில்
பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப் பல்லவனீச்சரத்தில்
விரும்பி வீற்றிருந்தருள்பவர். இரவில் நடனம் ஆடுதலை விரும்புபவர். இவர்
தன்மை யார் அறிவார்?
கு-ரை:
பல்லில் ஓட்டினர் - பல் இல்லாத மண்டை ஓட்டைப் பிச்சைப்
பாத்திரமாக உடையவர். எல்லி ஆட்டு உகந்தார் - இரவில் ஆடுதலில்
விருப்பம் உடையவர். ஆட்டு - முதனிலை திரிந்த தொழிற் பெயர்.
6.
பொ-ரை: சிவபெருமான் பச்சைநிறம் கொண்ட திருமேனி
உடையவர். பிச்சையேற்று உண்பவர். காவிரிப்பூம்பட்டினத்துப்
பல்லவனீச்சரத்தில் விரும்பி வீற்றிருந்தருளுபவர். இவர் தன்மை யார்
அறிவார்?
கு-ரை:
பச்சைமேனியர் - சிவபெருமானுக்குப் பச்சை நிறம்
உண்டென்பது பச்சை நிறம் உடையர் பாலர், சாலப் பழையர்,
பிழையெலாம் நீக்கி ஆள்வர் (தி.6.ப.17.பா.7.) எனவரும் தாண்டகத்தால்
அறிக. சதாசிவமூர்த்தியின் ஐம்முகங்களில் ஒன்றாகிய சத்தியோஜாதம் பச்சை
நிறம் உடையது என்றும், அது அத்திருத்தாண்டகத்துப் பாலர் என அடுத்துக்
குறித்தமையால் அறியப்படும் எனவும் கூறுப.
|