பக்கம் எண் :

1322திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

குருந்துயர் கோங்கு கொடிவிடு முல்லை
     மல்லிகை சண்பகம் வேங்கை
கருத்தடங் கண்ணின் மங்கைமார் கொய்யுங்
     கழுமல நகரென லாமே.               10

4078. கானலங் கழனி யோதம்வந் துலவுங்
       கழுமல நகருறை வார்மேல்
ஞானசம் பந்த னற்றமிழ் மாலை
     நன்மையா லுரைசெய்து நவில்வார்
ஊனசம் பந்தத் துறுபிணி நீங்கி
     யுள்ளமு மொருவழிக் கொண்டு
வானிடை வாழ்வர் மண்மிசைப் பிறவார்
     மற்றிதற் காணையும் நமதே.            11

திருச்சிற்றம்பலம்


திரியும் புத்தர்களம் ஆராய்ந்துணரும் அறிவிலாது ஏனைச் செந்
நெறியாளர்களை இழிமொழிகளால் இகழ்ந்துரைப்பர். அப்புன்
மொழிகளைப் ‘புறம் கேளோம்’ என்ற மறையின்படி ஒரு பொருளாகக்
கொள்ளாத செம்மையாளர்கட்கு நன்மைபுரியும் சிவபெருமான்
வீற்றிருந்தருளும் இடமாவது, குருந்து, கோங்கு, முல்லை, மல்லிகை,
சண்பகம், வேங்கை ஆகிய மலர்களைக் கரிய அகன்ற கண்களையுடைய
மங்கையர்கள் கொய்கின்ற திருக்கழுமலநகர் எனக் கூறலாம்.

     கு-ரை: உரிந்து - ஆடை உரிந்து. (உடையை நீக்கி) ஒரு கூட்டத்தார்
ஆடையே இல்லாதவர். மற்றொரு கூட்டத்தார் ஒன்றுக்கு ஐந்தாக ஆடை
போர்த்தவர் என ஒரு நயம். அத்துகில் - ஐந்து என்னும் குறிப்பில் வந்த
பண்டறிசுட்டு.

     11. பொ-ரை: கடற்கரைச் சோலைகளை அடுத்த வயல்களில் கடல்நீர்
வந்து பாய்தலையுடைய திருக்கழுமலம் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளும் இறைவனைப் போற்றிப் பாடிய ஞானசம்பந்தனுடைய நல்ல
தமிழ்மாலைகளைப் பத்தியோடு பொருள் உணர்ந்து பாடித் துதிப்பவர்கள்
உடலுடன் தொடர்பு கொண்டதான பிறவிப் பிணி நீங்கி, உள்ளம்
ஒருமைப்பாட்டினையுடைய சிவலோகத்தில் வாழ்வர். மீண்டும் நிலவுலகில்
வந்து பிறவார். இதற்கு ஆணையும் நம்முடையதே ஆகும்.