பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)124. திருக்குருகாவூர்1365

4135. சுரிகுழ னல்ல துடியிடை யோடு
  பொரிபுல்கு காட்டிடை யாடுதிர் பொங்க
விரிதரு பைம்பொழில் வெள்ளடை மேவிய
எரிமழு வாட்படை யெந்தை பிரானே.          5

4136. காவியங் கண்மட வாளொடுங் காட்டிடைத்
  தீயக லேந்திநின் றாடுதிர் தேன்மலர்
மேவிய தண்பொழில் வெள்ளடை மேவிய
ஆவினி லைந்துகொண்டாட்டுகந் தீரே.         6

  * * * * * * * *                       7,8,9,10,11

திருச்சிற்றம்பலம்


     5. பொ-ரை: விரிந்த பசுமையான சோலைகள் நிறைந்த திருக்
குருகாவூரில் வெள்ளடை என்னும் கோயிலில் விரும்பி வீற்றிருந்தருளுகின்ற,
நெருப்பு, மழு, வாள் முதலிய படைகளை ஏந்தியுள்ள எம் தந்தையாகிய
பெருமானே! நீர் அழகிய சுரிந்த கூந்தலையும், உடுக்கை போன்ற
இடையினையுமுடைய உமாதேவியோடு, வெப்பத்தின் மிகுதியால் மரங்கள்
முதலியவை பொரிகின்ற சுடுகாட்டில், உலகுமீள உளதாக, ஆடுகின்றீர்.

     கு-ரை: (நல்ல) சுரிகுழல் துடியிடை - சுரிந்த கூந்தலையும் உடுக்கை
போன்ற இடையையும் உடைய அம்பிகை. அன்மொழித் தொகை.
பன்மொழித்தொடர். பொரிபுல்கு காட்டிடை - வெப்பத்தின் மிகுதியால்
மரங்கள் முதலியவை பொரி பொருந்திய சுடுகாடு.

     6. பொ-ரை: தேன் நிறைந்த மலர்கள் பொருந்திய குளிர்ச்சிமிக்க
திருக்குருகாவூரில் வெள்ளடை என்னும் திருக்கோயிலில் விரும்பி
வீற்றிருந்தருளுகின்ற, பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால்
அபிடேகம் செய்யப்படுதலை விரும்பும் பெருமானே! குவளை மலர் போன்ற
அழகிய கண்களையுடைய உமாதேவியோடு சுடு காட்டில் கையில் தீ ஏந்தி
நின்று ஆடுகின்றீர்.

     கு-ரை: தீயகல் ஏந்தி நின்று ஆடுதிர் என்பது “கரதலத்தில்
தமருகமும் எரியகலும் பிடித்து ஆடி” எனச் சுந்தரமூர்த்திகள் திரு வாக்கில்
வருவதும் காண்க.

     7,8,9,10,11, * * * * * * * * *