பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள்371

ஒன்று இருந்தது. திருவிழா சேவிக்க வந்த மாகேஸ்வரர்களுக்கு அதில்
உணவு அளிக்கப்பெற்று வந்தது. இச்செய்தி விக்கிரமசோழன் கல்வெட்டில்
குறிக்கப்பெற்றுள்ளது. இக்கோயிலில் நெய் அளக்கும் கருவிக்கு,
திருவெண்காடன்நாழி என்று பெயர் வைக்கப் பெற்றிருந்தது. இக்கோயில்
கல்வெட்டுக்களில் உத்தம சோழர் தேவியாரின் பெயர் செட்டன்
சொரப்பையரான திரிபுவன மாதேவியார் என்பதும், முதலாம் இராஜேந்திர
சோழதேவர் (கங்கைகொண்ட சோழர்) முதலாம் இராஜராஜ சோழனுக்கு
அவர் தேவியாராகிய வானவன்மாதேவியார் வயிற்றில் தோன்றியவர்
என்பதும் அறியக் கிடக்கின்றன.

     கல்வெட்டுகளில் வந்துள்ள திருவெண்காடுடையார் திருவுண்ணாழிகை
உள்ளுத்திருப்புறக் குடையில் இவர்வைத்த நுந்தாவிளக்கு ஒன்றுக்கு”
என்பனபோன்ற தொடர்களில், திருவுண்ணாழிகை என்ற தொடர் வந்துள்ளது.
அதற்குக் கருப்பஇல் என்றுபெயர்.

     இராஜகேசரி பன்மரின் இரண்டாமாண்டுக் கல்வெட்டு திருவெண்காட
தேவர்க்கு நுந்தாவிளக்கின் பொருட்டு, பெருநற்கிள்ளி சோழனால் ஆடுகள்
கொடுக்கப்பெற்ற செய்தியை உணர்த்துகின்றது. சோழமன்னரின் முன்னோர்
பெயர், இங்குக் குறிக்கப்பெற்ற ஒருவனுக்கு வைக்கப்பெற்றிருப்பது
பாராட்டற்குரியது.

     “பொத்தப்பிச்சோழன் நிலத்துக்கு மேற்கும்
     பட்டணப்பெருவழிக்கு வடக்கும்.”

என்னும் கல்வெட்டுப்பகுதி (இராஜகேசரி வர்மரின் இரண்டாமாண்டு
கல்வெட்டு) திருவெண்காட்டிலிருந்து காவிரிப்பூம்பட்டினத்துக்குப் போகப்
பெருவழி இருந்ததைத் தெரிவிக்கின்றது.1


     1See the Annual Reports on South Indian Epigraphy for the
year 1896, 1918 No. 110-122, 442-521. See also the South Indian
Inscriptions, Vol. 13. The Cholas. Numbers 15, 16, 144.