பக்கம் எண் :

372தலங்களின் வரலாற்றுக் குறிப்புகள் 

80. திருவெண்டுறை

     இக்காலம் வண்டுறை என்று வழங்கப்பெறுகின்றது. இது நாகை
காயிதே மில்லத் மாவட்டம் மன்னார்குடி தொடர் வண்டி நிலையத்திற்குக்
கிழக்கே 10 கி.மீ. தூரத்தில் இருக்கின்றது. காவிரித் தென்கரைத் தலங்களுள்
நூற்றுப் பன்னிரண்டாவது ஆகும். மன்னார் குடியிலிருந்து இவ்வூர் செல்லப்
பேருந்துகள் உள்ளன.

     இறைவரின் திருப்பெயர் வெண்டுறைநாதர். இப்பெயர் இவ்வூர்ப்
பதிகத்தின் இரண்டாம் பாடலில் குறிக்கப்பெற்றுள்ளது. இறைவியின்
திருப்பெயர் வேல்நெடுங்கண்ணி. பிருங்கி என்னும் முனிவர் வண்டு
உருவெடுத்து இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே துளைத்துச் சென்று
இறைவனை மாத்திரம் வழிபட்ட பதி இதுவென்றும், கர்ப்பஇல்லின்
உள்பக்கத்தில் வண்டின் ஒலி இன்றும் கேட்கின்றது என்றும் கூறுவர்.
இத்தலத்தை வித்யாதரரும் பூசித்தனர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று
இருக்கின்றது.

81. திருவேட்டக்குடி

     இது காரைக்காலுக்கு வடகிழக்கே 12 கி.மீ. தூரத்தில் இருக்கிறது.
பொறையாறு-காரைக்கால் பேருந்து வழியில் வரிச்சிகுடி என்னும் இடத்தில்
திருவேட்டக்குடி கை காட்டி உள்ளது. அங்கு இறங்கி கிழக்கே 2 கி.மீ.
தூரம் சென்றால் ஆலயத்தை அடையலாம். இறைவரின் திருப்பெயர் -
திருமேனியழகர். இறைவியின் திருப்பெயர் - சாந்தநாயகி.

     அர்ச்சுனன் தவஞ்செய்தபொழுது இறைவன் வேடரூபமாக வெளிப்பட்டு
அருளியதலம் என்பர். இதற்கு ஞானசம்பந்தர் பதிகம் ஒன்று இருக்கிறது.

82. திருவேதிகுடி

     வேதம் வழிபட்ட காரணத்தால் இது வேதிகுடி என்னும் பெயர்
எய்திற்று. தஞ்சாவூரிலிருந்து திருவையாற்றிற்குச் செல்லும் பெருவழியில்
இருக்கும் திருக்கண்டியூரிலிருந்து கிழக்கே சுமார் 5 கி.மீ. தூரத்தில்
இருக்கின்றது.