2946. |
கோடல்கள்
புறவணி கொல்லை முல்லைமேல் |
|
பாடல்வண்
டிசைமுரல் பயில்பைஞ் ஞீலியார்
பேடல ராணலர் பெண்ணு மல்லதோர்
ஆடலை யுகந்தவெம் மடிக ளல்லரே. 4
|
2947. |
விழியிலா
நகுதலை விளங்கி ளம்பிறை |
|
சுழியிலார்
வருபுனற் சூழல் தாங்கினான்
பழியிலார் பரவுபைஞ் ஞீலி பாடலான்
கிழியிலார் கேண்மையைக் கெடுக்க லாகுமே. 5 |
4.
பொ-ரை: காந்தள் மலர்களிலும், முல்லை நிலத்திலுள்ள
காடுகளிலுமுள்ள முல்லை மலர்களின் மீதும் அமர்ந்திருக்கும் வண்டுகள்
செய்யும் ரீங்காரம் பண்ணிசைபோல் ஒலிக்க, திருப்பைஞ்ஞீலி என்னும்
திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவர் அலியல்லர். ஆணுமல்லர்.
பெண்ணுமல்லர். திருநடனம் புரிவதில் விருப்பமுடைய அப்பெருமானார்
எங்கள் தலைவர் ஆவார்.
கு-ரை:
கோடல்-காந்தள் புறவணிகொல்லை முல்லைமேல் பாடல்
வண்டிசை முரல் பயில் பைஞ்ஞீலி-முல்லை நிலத்தைச் சார்ந்த காடுகளில்
முல்லை மலரின் மேல் பாடுதலையுடைய வண்டினம் இசைமுரலுதல்
பொருந்திய திருப்பைஞ்ஞீலி. முரலுதல் மூக்கினால்-ஒலித்தல். முரலுதல் என்ற
சொல் பகுதியளவாய் முரல் என்று நின்றமை முதனிலைத் தொழிற் பெயர்.
பயில் பைஞ்ஞீலி-வினைத்தொகை.
5.
பொ-ரை: விழியிலாத பற்களோடு கூடிய பிரமகபாலத்தைக் கையில்
ஏந்தி, இளம்பிறையையும், கங்கையையும் சடையில் தாங்கியுள்ளவன்
சிவபெருமான். பழியிலாத அடியவர்கள் போற்றிப் பாடத் திருப்பைஞ்ஞீலி
என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் தன்னை
வணங்குபவர்களின் செல்வ மில்லாத வறுமைநிலையைப் போக்குவான்.
கு-ரை:
நகு வெண்டலையையும் பிறையையும் கங்கை நீரைச் சுற்றிய
சடையிடத்தே தரித்தவன். சுழியில் ஆர் -சுழியோடு பொருந்திய, வேற்றுமை
மயக்கம். பைஞ்ஞீலி பாடலான்-திருப்பைஞ்ஞீலியின் கண்
பாடுதலையுடையவனாகி வீற்றிருப்பவன்.
|