பக்கம் எண் :

508திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

2957. ஞாழலுஞ் செருந்தியு நறுமலர்ப் புன்னையுந்
  தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை யிறைவ ரல்லரே.          4

2958. பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
  ஏதங்கள் பலவிடர் தீர்க்கு மெம்மிறை
வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.          5


     கு-ரை: தோலொடு நூலிழைதுதைந்த மார்பினர். ஆலம் அது
அமரும்-கல்லாலின் அடியில் அமரும் எம் அடிகள். இனி நஞ்சை
விரும்பியுண்ட எனினும் அமையும். அது-பகுதிப்பொருள் விகுதி.

     4. பொ-ரை: புலிநகக் கொன்றையும், செருந்தியும், நறுமணமிக்க
புன்னை மலர்களும், தாழையும், குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச்
சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில், யானையின்
தோலையுரித்த ஆற்றல் உடையவராயும், யாழிசை போன்ற இனிமை
உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ?

     கு-ரை: ஞாழல்-புலிநகக்கொன்றை. ஞாழற்பூவும், செருந்திப் பூவும்
(செருந்தி-செந்நிறப் பூவையுடைய ஒரு மரம்,) புன்னைப்பூவும் ஆகிய
இவைகள் விளங்கும் கடற்கரைச் சோலையில் உள்ள திருவெண்காடு
மேவிய-யானையையுரித்த-இசையையுடைய-இறைவர் எனத் தனித் தனிக்
கூட்டுக. ஞாழல், செருந்தி இரண்டும் முதல் ஆகுபெயர்.

     5. பொ-ரை: எம் இறைவர், பூதகணங்கள் பல உடைய புனிதர்.
புண்ணிய வடிவினர். தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும்,
துன்பங்களையும் தீர்த்தருளுபவர். அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர்.
திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள்
அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ?

     கு-ரை: ஏதம்-குற்றம். ஏதங்களையும் பல இடர்களையும் தீர்க்கும் எமது
பதி. வெண்காடு மேவி. பரமர் பாதங்களைத் தொழ