பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)16. திருக்கொள்ளிக்காடு517

2975.
நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன்
  குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.             11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: அறிவில் நாண் இலிகள் - அறிவும் நாணமும் இல்லாதவர்.
ஆடையின்றி யிருக்கும் துறவிகளை நாணிலிகள் என்றார். “நாணமும்
உடையும் நன்கனம் நீத்து” என்பது மணிமேகலை. அவர் உரைகள்
அனைத்தும் பொய். அவற்றை விட்டு நான்மறை பாடிய, மாதோடும்
கூடியிருப்பவராகிய கொள்ளிக்காடர்உளார். “அவரைச் சார்ந்து உய்தி
கூடுங்கள்” என்பது குறிப்பெச்சம்.

     11. பொ-ரை: நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த
ஞானசம்பந்தன், குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும்
தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை, அழகு தமிழில், இன்னிசையோடு
பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின்
திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள்.

     கு-ரை: நல்ல தவத்தைச் செய்தவர்களையுடைய சீகாழி. குற்றமில்
பெரும் புகழ்க் கொள்ளிக்காடர்:- இறைவன் புகழே புகழ். ஏனையோர் புகழ்
அனைத்தும் பொய்ப்புகழ் என்பதாகும். “இறைவன் பொருள் சேர் புகழ்”
என்ற திருக்குறட் பரிமேலழகருரையானும் உணர்க.

திருஞானசம்பந்தர் புராணம்

நம்பர்மகிழ் திருவாரூர் வணங்கிப் போந்து
     நலங்கொள் திருக் காறாயில் நண்ணி ஏத்திப்
பைம்புனல்மென் பணைத்தேவூர் அணைந்து போற்றிப்
     பரமர்திரு நெல்லிக்காப் பணிந்து பாடி
உம்பர்பிரான் கைச்சினமும் பரவித் தெங்கூர்
     ஓங்குபுகழ்த் திருக்கொள்ளிக் காடும் போற்றிச்
செம்பொன்மதில் கோட்டூரும் வணங்கி ஏத்தித்
     திருமலிவெண் டுறைதொழுவான் சென்று சேர்ந்தார்.

                                 -சேக்கிழார்.