3016. |
வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி |
|
விரல்தனில்
அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே. 8
|
3017. |
நீர்மல்கு மலருரை வானும் மாலுமாய்ச் |
|
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே. 9 |
8.
பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிமை வாய்ந்த
அரக்கனான இராவணனின் நீண்ட முடிகளைத் தம் காற் பெருவிரலை
ஊன்றி அடர்த்தவர் சிவபெருமான். தம் திருமேனி முழுவதும்
திருவெண்ணீற்றினைப் பூசி, ஒலிக்கின்ற கங்கையைத் தம் சடைமுடியின் ஒரு
பக்கத்தில் அணிந்து திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற
அப்பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களின் பாவம் நாசமாகும்.
கு-ரை:
விரறனில் - விரல்+தனில். பொருபுனல் புடையணி பூவணம் -
கரையை மோதுகின்ற வைகைநீரை ஒரு பக்கத்திலேயணிந்த பூவணம்.
9.
பொ-ரை: நீரில் வளரும் தாமரைமலரில் வீற்றிருக்கின்ற பிரமனும்,
திருமாலும், தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப் படுத்தும் இறைவனின்
சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு இயலாதவராயினர். போர்த் தன்மையுடைய
மழுப்படையுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூவணத்தை
அழகிய மலர் கொண்டு போற்றுதல் இன்பம் தரும்.
கு-ரை:
நீர்மல்கும்மலர் - தாமரை; நீரஜம் என்பது வட சொல்.
இரண்டாம் அடிக்குப் பிரம விட்டுணுக்கள் முதற்கண் தாம் செருக்கு அழியப்
பெற்றுப் பெருமானைச் சரண் புகுந்திருந்தால் இவ்வளவு துன்பங்களுக்கு
ஆளாகியிருக்க வேண்டியதில்லை என்பது பொருள். பூவணம் வணங்குவதே
முத்தியின்பமாம். ஆலயம் தானும் அரனெனத் தொழுமே என்பது சிவஞான
போதம். கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி, வீடும் வேண்டா விறலின்
விளங்கினார் என்பது பெரியபுராணம்.
|