பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)24. திருக்கழுமலம்567

3061. தாருறு தட்டுடைச் சமணர்சாக் கியர்கள்தம்
  ஆருறு சொற்களைந் தடியிணை அடைந்துய்ம்மின்
காருறு பொழில்வளர் கழுமல வளநகர்ப்
பேரறத் தாளொடும் பெருந்தகை யிருந்ததே.     10

3062. கருந்தடந் தேன்மல்கு கழுமல வளநகர்ப்
  பெருந்தடங் கொங்கையோ டிருந்தஎம் பிரான்றனை
அருந்தமிழ் ஞானசம் பந்தன செந்தமிழ்
விரும்புவா ரவர்கள்போய் விண்ணுல காள்வரே.  11

திருச்சிற்றம்பலம்


     10. பொ-ரை: மாலை போன்று, பாயை விரும்பி ஆடையாக
அணிந்துள்ள சமணர்களும், புத்தர்களும், இறையுண்மையை எடுத்துரைக்காது,
தமக்குப் பொருந்தியவாறு கூறுதலால், அவற்றை விடுத்து, இறைவனின்
திருவடிகளை வழிபட்டு உய்வீர்களாக. பசுமைவாய்ந்த அழகிய சோலைகள்
வளர்ந்துள்ள திருக்கழுமலம் என்னும் வளநகரில் பேரறத்தாளாகிய
உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: தார் உறுதட்டு உடைச்சமணர் - மாலையைப்போல விரும்பி
உடுத்திய பாயை உடைய சமணர். தட்டு - பாய். "தட்டையிடுக்கி"
என்பதனாற்கொள்க "தட்டைச் சாத்திப் பிரட்டே திரிவார்" என்பது இங்குக்
காண்க.

     பேர் அறத்தாள் - முப்பத்திரண்டறமும் வளர்த்தவள். அறத்தாள் -
தரும சொரூபி: அம்பிகை எனக் கொண்டு பெரிய நாயகி எனலும் ஒன்று.

     11. பொ-ரை: நீர்வளமும், தேன்வளமும் பெருகிய திருக்கழுமல
வளநகரில், மேல்நோக்கி வளைந்த பெரிய கொங்கைகளையுடைய
உமாதேவியோடு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானை,
அருந்தமிழ் வல்லவனான ஞானசம்பந்தன் செழுந்தமிழில் அருளிய
இத்திருப்பதிகத்தை விரும்பி ஓத வல்லவர்கள் விண்ணுலகை ஆள்வர்.

     கு-ரை: கரும் தடம் - கரிய சேற்றையுடைய குளங்கள்.