பக்கம் எண் :

566திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3059. அரக்கனார் அருவரை யெடுத்தவன் அலறிட
  நெருக்கினார் விரலினால் நீடியாழ் பாடவே
கருக்குவா ளருள்செய்தான் கழுமல வளநகர்ப்
பெருக்குநீ ரவளொடும் பெருந்தகை யிருந்ததே.    8

3060. நெடியவன் பிரமனும் நினைப்பரி தாய்அவர்
  அடியொடு முடியறி யாஅழல் உருவினன்
கடிகமழ் பொழில்அணி கழுமல வளநகர்ப்
பிடிநடை யவளொடும் பெருந்தகை யிருந்ததே.     9


     8. பொ-ரை: பெருமையுடைய கயிலைமலையை எடுத்த அரக்கனான
இராவணன் அலறும்படி தம் காற்பெருவிரலை ஊன்றி இறைவர்
அம்மலையின்கீழ் அவனை நெருக்கினார். பின் அவன்தன் தவறுணர்ந்து
நீண்ட யாழை எடுத்து இன்னிசையோடு பாட, கூர்மையான வாளை
அருளினார். திருக்கழுமலம் என்னும் வளநகரில் உயிர்கட்கு மிக்க இன்னருள்
செய்யும் உமாதேவியோடு பெருந்தகையாராகிய சிவபெருமான்
வீற்றிருந்தருளுகின்றார்.

     கு-ரை: அரக்கனார் அருவரை எடுத்தவன் - முதலில் உயர்த்திப்பின்
எடுத்தவன் எனத் தாழ்த்திக்கூறிய நயத்தை "எனைத்துணையர் ஆயினும் என்
ஆம்" என்னுந் திருக்குறளோடு ஒப்பிட்டுக் காண்க. நீடியாழ் - நீடு + யாழ் -
நெடியவீணை, வீணையாற்பாட. கருக்கு - முனை; கூர்மை. பெருக்கும் நீர்
அவள் - அன்பர்க்குத் திருவருளைப் பெருக அளிக்கும் தன்மையுடையவள்;
என்பது "அன்பர்க்கு முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருள்" என்ற
திருவெம்பாவைப் (தி.8) பாடற்கருத்து.

     9. பொ-ரை: நினைந்துருகும் தன்மையில்லாத திருமாலும், பிரமனும்
அடிமுடி அறியாவண்ணம் சிவபெருமான் அழலுருவாய் ஓங்கி நின்றனன்.
நறுமணம் கமழும் சோலைகளை உடைய திருக்கழுமலம் என்னும் வளநகரில்
பெண்யானையின் நடைபோன்று விளங்கும் நடையை உடைய
உமாதேவியோடு பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்.

     கு-ரை: நினைந்துருகும் தன்மையில்லாதவர்களாகிய பிரம
விட்டுணுக்களால் அறியமுடியாத அழல் உருவாய் நின்றவன். அரிது -
இன்மைமேல் நின்றது. "மனக்கவலை மாற்றலரிது" என்புழிப்போல.
(திருக்குறள்).