|
பதிக வரலாறு:
ஆளுடைய
பிள்ளையார், திருவியலூர் அடிகளைப் போற்றி இன்னிசைப்
பதிகத் தொடை சாத்தி அம் முழுமுதல்வன் காட்டிய கண்ணார்தரும்
உருவாகிய அருள் வேடத்தைத் தொழுது, திருந்து தேவன்குடியிற்சென்று
சிவபெருமான் கோயிலை எய்திக், காதலொடு புகுந்து, போற்றி வணங்கிப்
புனைந்த அருந்தமிழ் மாலை இது.
பண்: கொல்லி
ப.தொ.எண்: 283 |
|
பதிக எண்: 25 |
திருச்சிற்றம்பலம்
3063. |
மருந்துவேண் டில்இவை மந்திரங் கள்இவை |
|
புரிந்துகேட் கப்படும் புண்ணியங் கள்இவை
திருந்துதே வன்குடித் தேவர்தே வெய்திய
அருந்தவத் தோர்தொழும் அடிகள்வே டங்களே. 1 |
1.
பொ-ரை: திருந்துதேவன்குடியில் வீற்றிருக்கும், தேவர்கட்கெல்லாம்
தேவனாக விளங்குபவனும், அருந்தவத்தோர்களால் தொழப்படுபவனுமான
சிவபெருமானின் திருவேடங்கள் (திருநீறு, உருத்திராக்கம், சடாமுடி) மருந்து
வேண்டுபவர்க்கு மருந்தாகவும், மந்திரங்கள் விரும்புவார்கட்கு மந்திரமாகவும்,
சிவபுண்ணியச் சரிதை கேட்க விரும்புவார்கட்கு அப்புண்ணியப் பயனாகவும்
அமையும்.
கு-ரை:
திருந்து தேவன்குடியில் உள்ள தேவனும் அருந்தவத்தோர்கள்
வணங்கும் அடிகளும் ஆகிய சிவபெருமானது வேடங்களாகிய திருநீறு
உருத்திராக்கம் சடைமுடி ஆகிய இவற்றைக் கண்ணாற் கண்டாலும்,
இவ்வேடத்தை மனத்தால் நினைத்தாலும் அவை மருந்து வேண்டினார்க்கு
மருந்தாகவும், மந்திரம் விரும்பினார்க்கு மந்திரமாகவும், சிவபுண்ணியச்
சரிதை கேட்க விரும்பினார்க்கு அப்புண்ணியப் பலனாகவும் பயன்தரும்
என்பது இதன்கருத்து. இங்கு "அடிகள்" என்றது சிவபெருமானை, "எம்
அடிகள் நின்றவாறே" என்ற அப்பர் திருவாக்காலும் அறிக. இப்பதிகத்தின்
ஒவ்வொரு பாடலிலும் இச்சொல் பயின்று வருகிறது.
|