பக்கம் எண் :

578திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3077. நிறையுடை நெஞ்சுளும் நீருளும் பூவுளும்
  பறையுடை முழவுளும் பலியுளும் பாட்டுளும்
கறையுடை மிடற்றண்ணல் கருதிய கானப்பேர்
குறையுடை அவர்க்கலாற் களைகிலார் குற்றமே.   4

3078. ஏனப்பூண் மார்பின்மேல் என்புபூண் டீறிலா
  ஞானப்பே ராயிரம் பேரினா னண்ணிய
கானப்பேர் ஊர்தொழுங் காதலார் தீதிலர்
வானப்பேர் ஊர்புகும் வண்ணமும் வல்லரே.     5


     4. பொ-ரை: திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தில்
வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட கறுத்த கண்டத்தையுடைய சிவபெருமானை,
மனத்தை பொறிவழிஓடாது ஒருமுகப்படுத்தி நிறுத்திய நெஞ்சுடன், பூவும்
நீரும் கொண்டு, முழவு முழங்க, இறைவனின் புகழைப்பாடி நைவேத்தியம்
செய்து வழிபடுகின்ற மெய்யடியார்களுக்கு அல்லாது ஏனையோர்களுக்குக்
குறைகள் தீருமோ!

     கு-ரை: நிறை-மனம் பொறி வழி போகாமல் அறிவின் வழி நிறுத்துதல்.
இறைவனுக்கு வழிபாடு ஆற்றுவோர்க்கு முதற்கண் வேண்டப்படுவது நிறை
உடை நெஞ்சு. பூசனைத் திரவியங்களாகிய நீரும், பூவும், நைவேத்தியமும்,
தோத்திரமும், வாத்திய வகைகளும் இங்குக் கூறப்படுகின்றன. இவற்றுள்
எல்லாம் இறைவன் தங்கியிருத்தலையறிந்து பூசிப்பதையே தமக்குக்
கருமமாகக்கொண்டு திருக்கானப் பேரைப் பூசிக்கும் மெய்யடியார், தமது
குறைகள் நீங்கப் பெறுவார்களேயன்றி ஏனையோர் அவற்றைக்
களையமாட்டாதவராவர் என்பது பாடலின் கருத்து. "பார்க்கின்ற மலரூடு
நீயே யிருத்தி" என்பது தாயுமானவர் வாக்கு.

     5. பொ-ரை: பன்றிக்கொம்பை ஆபரணமாக அணிந்த மார்பின்மேல்,
எலும்புமாலையும் அணிந்து, அழிவில்லாத சிவஞானம் தருகின்ற திருநாமம்
ஆயிரம் கொண்டு திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்தினை விரும்பித்
தொழும் அடியவர்கள் தீவினைகளற்றவர் ஆவர். தேவர்களின் நகரமான
அமராவதியை அடையும் சிறப்புடையவர் ஆவர்.

     கு-ரை: ஏனம் - பன்றியின் கொம்பாகிய. பூண் - அணிகலத்தையுடைய,
மார்பினில், என்பு பூண்டு - எலும்பு மாலைகளையணிந்து.