பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)26. திருக்கானப்பேர்579

3079. பள்ளமே படர்சடைப் பாற்படப் பாய்ந்தநீர்
  வெள்ளமே தாங்கினான் வெண்மதி சூடினான்
கள்ளமே செய்கிலார் கருதிய கானப்பேர்
உள்ளமே கோயிலா உள்கும்என் உள்ளமே.      6

3080. மானமா மடப்பிடி வன்கையால் அலகிடக்
  கானமார் கடகரி வழிபடுங் கானப்பேர்
ஊனமாம் உடம்பினில் உறுபிணி கெடஎண்ணில்
ஞானமா மலர்கொடு நணுகுதல் நன்மையே.       7


ஞானம் - சிவபோதம்தருவன ஆகிய. பேர்ஆயிரம் - சிறந்த ஆயிரம்
பெயர்களும். பெயரன் - பெயராக உடையவன். "பேர் ஆயிரம் பரவி
வானோர் ஏத்தும் பெம்மான்" (அப்பர்) "ஆயிரம் பேருகந்தானும் ஆரூர்
அமர்ந்த அம்மானே” (சுந்தரமூர்த்திகள்) "ஒரு நாமம் ஓர் உருவம்
ஒன்றுமில்லார்க்கு ஆயிரம் திருநாமம் பாடி நாம் தெள்ளேணம்
கொட்டாமோ" (தி.8 திருவாசகம்) எனவருவனவும் அறிக. ஆயிரம் என்பது
மிகப் பல என்னும் பொருட்டு "பழுதெண்ணு...எழுபது கோடியுறும்" என்ற
திருக்குறளிற்போல. (639)

     6. பொ-ரை: பள்ளம் போன்ற படர்ந்த சடையில், வெள்ளம் போலப்
பாய்ந்த கங்கையைத் தாங்கி வெண்ணிறச் சந்திரனையும் சூடினான்
சிவபெருமான். கள்ளம் என்பதை அறியாது வெள்ளை உள்ளத்துடன்
இறைவனை வழிபடுகின்ற, திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள
மெய்யடியார்களின் திருவுள்ளத்தைக் கோயிலாக நினைத்து என் மனம்
வழிபடும்.

     கு-ரை: பள்ளம்-பள்ளம்போல். மே-மேவிய-பொருந்திய. படர்ந்த
சடையில். பாய்ந்தநீர் வெள்ளம் தாங்கினான். நீர் பாய்வது பள்ளத்தில்
ஆதலால் கங்கை நீருக்குச் சடை பள்ளம் போல் இருந்தது என்பது. பள்ளம்
மே(வு) படர்சடை. மே + சடை-வினைத்தொகை. கள்ளம் நினைத்தலையும்
செய்தறியாதவர்களாகிய மெய்யன்பர் கருதிய கானப்பேர்.

     7. பொ-ரை: பெரிய பெண் யானை தன் வலியகையால் அலகிடக்
கானகத்திலுள்ள மதமுடைய பெரிய ஆண் யானையானது வழிபடுகின்ற
திருக்கானப்பேர் என்னும் திருத்தலத்திலுள்ள