பதிக வரலாறு:
பைம்பொன்மலைவல்லி
செம்பொன்வள்ளத்தில் பரிந்தளித்த
ஞானவாரமுதம் உண்ட பிள்ளையார் தமது உள்ளத்தில் தெளிகின்ற அன்பின்
மெய்ம்மையுருவினையும், அவ்வன்பின் உள்ளே மன்னும் விமலரையும்
உடன்கண்ட விருப்பம் பொங்கிப் பள்ளத்தில் இழிகின்ற புனல்போல்பரந்து
சென்றது. மகிழ்ந்து எழுந்து பலமுறையும் வணங்கி, கண்ணருவி நீர் பாய
நின்றார். திருக்காளத்தி மலைக்கீழ் அணைந்தார். இறைஞ்சினார்.
அம்மலைமேல் வீற்றிருந்த செய்ய தேனைக் காலங்கள்தோறும் அடைந்து
அடிபோற்றிப் பருகி ஆர்ந்து பாடிய பாமலர் இத் திருப்பதிகம்.
பண்:
கொல்லி
ப.தொ.எண்:294 |
|
பதிக
எண்: 36 |
திருச்சிற்றம்பலம்
3181. |
சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம் |
|
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே. 1 |
1.
பொ-ரை: சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை
அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின்
கரையில், தென்றல் காற்றும் வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல்
தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்திநாதர் உமாதேவியோடு,
அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.
கு-ரை:
சந்தம் - சந்தனமரம். ஆர் - ஆத்தி. சாதி - சாதிக்காய் மரம்.
உந்தும் - அலையால்
தள்ளி வரும். மந்தம் - தென்றல் காற்று.
மல்குவளன் - வளம் மிகுந்த; காளத்தி.
|