பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)42. திருச்சிற்றேமம்675

 42. திருச்சிற்றேமம்

பதிக வரலாறு:

     பெரியபுராணத்தில் இதைப் பாடிய அமயம் குறிக்கப்பட்டிலது.

பண்: கொல்லிக்கௌவாணம்

ப.தொ.எண்:300   பதிக எண்: 42

திருச்சிற்றம்பலம்

3244. நிறைவெண்டிங்கள் வாண்முக
       மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ
     ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற்
     பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா
     மேத்தநின்ற பெருமானே.     1


     1. பொ-ரை: வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய
முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்
சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய
வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும்
சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம்
ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.

     கு-ரை: நிறைவெண் திங்கள் - பூரணசந்திரன். அதுபோலும் வாள்
(ஒளி) முகம். மாதர்பாட. குறைவெண்திங்கள் சூடி - பிறையை அணிந்து.
மேய - விரும்பிய. பொழிலுல் பழனமும் சூழ்ந்த சிற்றேமம். குறை வெண்
திங்கள் சூடியதாதலின், நிறைவெண் திங்கள் முகத்தர் பாடலை விரும்பினான்.
முகமாதர் - உமாதேவியார். மேல்வரும் எல்லாப் பாடலிலும் இதைத் காண்க.
சிற்றேமத்தானே இறைவன் என்றும், உலகம் ஏத்த நின்றபெருமான் என்றும்,
ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.