பக்கம் எண் :

750திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3371. ஊழியூழி வையகத் துயிர்கடோற்று
       வானொடும்
ஆழியானுங் காண்கிலா வானைக்காவி
     லண்ணலைக்
காழிஞான சம்பந்தன் கருதிச்சொன்ன
     பத்திவை
வாழியாகக் கற்பவர் வல்வினைகண்
     மாயுமே.                           11

திருச்சிற்றம்பலம்


     கு-ரை: கடுக்கள் - கடுக்காய்கள். கழுக்கள் - கழுந்து போல்வார்.
மெய்யைப்போர்க்கும் பொய்யர், உடம்பைப் போர்வையாற் போர்ப்போர்
எனவும், பொய்யை மெய்யாக நடிப்போர் எனவும் பொருள்தரும்.
சிலேடை.

     11. பொ-ரை: ஊழிக்காலந்தோறும் உயிர்களுக்குத் தனு, கரண, புவன,
போகங்களைப் படைக்கின்ற பிரமனும், திருமாலும் இறைவனின் முடியையும்,
அடியையும் தேடிச்சென்றும் காண்பதற்கு அரிய திருவானைக்காவில்
வீற்றிருந்தருளும் அண்ணலான சிவ பெருமானைச் சீகாழிப்பதியில் அவதரித்த
ஞானசம்பந்தன் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை மண்ணில் நல்ல
வண்ணம் வாழக் கற்று ஓதவல்லவர்களின் கொடியவினையாவும்
மாய்ந்தழியும்.

     கு-ரை: ஊழிக்காலம் தோறும், உயிர்கள் தோற்றுவான் -
உயிர்களுக்குத் தனு, கரண, புவன, போகங்களைப் படைப்பவன்.
வாழி - வாழ்வு தருவது. இகரம் கருவிப் பொருளில் வந்தது.

     பதிகக் குறிப்பு எட்டாம் பாடலில் இராவணன் செயல் குறிக்கப்
பெறாமலும், ஒன்பதாம் பாடலில் வரும் அரி, பிரமர் செயல்
திருக்கடைக்காப்பில் வரப்பெறவும் அமைந்துள்ளது.