பக்கம் எண் :

756திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3375. ஆட்பா லவர்க்கருளும் வண்ணமு மாதி மாண்பும்
  கேட்பான் புகிலள வில்லை கிளக்க வேண்டா
கோட்பா லனவும் வினையுங் குறுகாமை யெந்தை
தாட்பால் வணங்கித் தலைநின் றிவைகேட்க தக்கார்.   4


தந்தையாரொடுதாய் இலர் என்றது - உலகை ஒடுக்கி மீளத்தோற்று
வித்தலால்,

     உலகிற்குத்தாமே தாயும் தந்தையும் ஆவதல்லது, தாம் பிறப்பு.
இறப்பு இல்லாதவர் என்றபடி. தம்மையே சிந்தியா எழுவார் வினை
தீர்ப்பவர் என்றதை, ஒளியாகிய தம்மை நினைத்தலால், இருளாகிய
வினை நீங்கச் செய்பவர் என்றபடி. எந்தையார் அவர் எவ்வகையார்
கொலோ என்றது. அளப்பரும் காட்சிப் பொருளாந்தன்மையை
எவ்வகைக்கூற்றிலும் கூறமுடியாது என்பதாம்.

     4. பொ-ரை: இறைவன் பக்குவமுடைய உயிர்கட்கு அருள்புரிகின்ற
தன்மையும், பழமை வாய்ந்த புகழும் கேட்கவும், சொல்லவும்
தொடங்கினால் அளவில்லாதன. ஆதலால் அவைபற்றிய ஆராய்ச்சி
வேண்டா. எம் தந்தையாகிய இறைவனின் திருவடிகளைச் சார்ந்து வணங்கி
அவன் புகழைக் கேட்கும் அடியவர்கட்குக் கோள்களாலும்,
தீயவினைகளாலும் துன்பம் உண்டாகாது.

     தாட்பால் வணங்கித் தலைநின்றிவை கேட்க - என்றது திருவடி
ஞானம் கைகாட்ட அதனுள் அடங்கி நின்றுணர்வதாகிய நிட்டை கூடல்
என்னும் நான்காவது ஞானநிலை.

     கு-ரை: ஆதி ஆட்பால் அவர்க்கு அருளும் வண்ணமும் மாண்பும் ...
வேண்டா என்றது. முதல்வராகிய அவர்தம் அடியார்களுக்கு அருளும்
விதத்தையும் அவர்தம் மாட்சிமையையும். கேட்பான்புகில் - கேட்கவும்
சொல்லவும் தொடங்கினால். அளவு இல்லை - அளவில்லாதன ஆதலால்,
கிளக்க வேண்டா - அவைபற்றிய ஆராய்ச்சியொன்றும் இயம்பவேண்டா
என்றவாறு. கோட்பால ... தக்கார் என்றது. எந்தை தாள்பால் - எம்
இறைவனின் திருவடியில் வணங்கி, தலைநின்று - சார்ந்து. தக்கார் -
பக்குவிகள், இவை - அருளும் வண்ணம் மாண்பு ஆகிய இவற்றை(க்
கேட்பாராக) அது நம்மைப்பற்றித் துன்புறுத்தும் துன்பங்களும் அவற்றின்
காரணமாகிய வினைகளும் சாராமல் ஒழியும் பொருட்டு என்றவாறு.