பக்கம் எண் :

892திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3551. ஏதமில ரரியமறை மலையர்மக
       ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை
     கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை
     கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி
     கமழுமயி லாடுதுறையே.               4


செங்கனி - சிவந்த பழங்களை. உதிர்த்திட - உதிர்க்க, அதனால் நிரந்து -
பரவி. கமழ் - மணக்கும், பூமடல் - கோட்டுப்பூ முதலிய மலர்களின்
இதழ்கள். விரிய - விரிவதனால். மணம் நாறும் (மயிலாடு துறை.) உதிர்த்திட
காரணகாரியப் பொருட்டு. குதிகொள்ள - காரணப் பொருட்டு.

     4. பொ-ரை: சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர். அரிய
வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர்.
மலையரசன் மகளான. ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய
உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப்பகுதியாக உறைகின்ற
சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது. ஆரவாரித்து வரும் அலைகள்
மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட
மாதர்கள் புக, மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும்
திருமாயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும்.

     கு-ரை: அரிய மறை ஏதமிலர் - அரிய வேதங்களில் சொல்லப்
படுகின்ற நிஷ்களங்கர். மலையர் மகளாகிய - மலையரனுக்கும்,
மலையத்துவசபாண்டியனுக்கும் மகளாகிய. விலங்குநுதல் - வளைந்த
புருவத்தையுடைய. பேதை - உமாதேவியாரின். தடம் - விசாலமான(மார்பு)
காதல் - விருப்பம். கவ்வை - ஓசை.

     மவ்வல் - மல்லிகை முதலாகிய நறுமண மலர்கள். கூடிவரு -
சேர்ந்து வருகின்ற. காவிரியுள் - காவிரியில்வரும். திரைகள் - அலைகள்.
புக - பாய்வதால். வெறிய - மணமற்ற மற்றைப் பொருள்களும். வெறி
கமழும் - மணம் வீசப்பெற்ற (மயிலாடுதுறை). மலையர் என்ற பன்மையால்,
இமயமலைக்குரியார், பொதியமலைக்குரியார் ஆம் இருவரையும் கொள்க.
காவிரிச் சிறப்பு: வீறுகோளணி.