பக்கம் எண் :

(மூன்றாம் திருமுறை)74. திருத் தேவூர்935

3595. மாசின்மன நேசர்தம தாசைவளர்
       சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு
     பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு
     மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது
     வீதிநிறை தேவூரதுவே.             4


சிவபெருமான். இனிது இருந்த இடம் - மகிழ்வோடிருந்த இடம்.
விண்தடவுவார் பொழில் - ஆகாயத்தை அளாவிய நெடிய சோலைகள்.
உகுந்த - சொரிந்த. நறவு ஆடி - தேனில் மூழ்கியும். மலர் சூடி -
மலர்களை அணிந்தும். விரை ஆர் - இவற்றால் வாசனைமிகுந்த.
சேண்தடவு - ஆகாயமளாவிய. மாளிகை - மாளிகைகள். செறிந்து -
நெருங்கி. திருஒன்றி - லக்ஷ்மிகரம் பொருந்தி (வளர் தேவூர் அதுவே)
மாளிகைகளைச் சூழப் பூஞ்சோலைகள் உள்ளன. காற்று வீசுவதால்
பூந்தேனும் பூக்களும் அவற்றில் வீசப்படுகின்றன. அதனால் அம்மாளிகைகள்
(நீரில் மூழ்கி மலர் சூடிவரும் மாதர்கள் போலத்தாங்களும்) தேனில் மூழ்கி
மலர்சூடி நிற்பன போற் காணப்படுகின்றன. அவற்றால் வாசனையும்
உடையனவாகக் காணப்படுகின்றன வென்பது பின்னிரண்டடிகளின் கருத்து.
சேண் என்பது செண் என எதுகை நோக்கிக் குறுக்கல் விகாரம் பெற்றது.

     4. பொ-ரை: சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள்
தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை
ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி
வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன்.
வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான்
இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால்
கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற
பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும்
நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும்.

     கு-ரை: மாசில் மனநேசர் - களங்கமற்ற மனத்தையுடைய, அடியார்கள்
(தன்மேல் வைத்த) ஆசைவளர் - ஆசை வளர்தற்குரிய.