பக்கம் எண் :

936திருஞானசம்பந்த சுவாமிகள் தேவாரம்  

3596. கானமுறு மான்மறிய னானையுரி
       போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர்
     மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ்
     மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள்
     பாடிவரு தேவூரதுவே.     5


சூலதரன் - சூலத்தைத் தரித்தவனும். மேலை இமையோர் ஈசன் -
வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனும், மறைஓதி - வேதங்களை
ஓதி அருளியவனும். எரி ஆடி - அக்கினியில் ஆடியவனும், மிகு -
வெற்றியை மிகுக்கும். பாசுபதன் - பாசுபத அஸ்திரத்தை யுடையவனும்
ஆகிய சிவபெருமான். மேவுபதிதான் - தங்கும் தலமாவது. வாசம் மலர் -
வாசனையுடைய மலர்களை. கோதுகுயில் - மூக்கால் கோதுகின்ற
குயில்களின். வாசகமும் - கூவுதலும். மாதரவர் - பெண்களின்
(மொழிவார்த்தையும்). பூவைமொழி - நாகண வாய்ப்புட்களின் வார்த்தையும்,
தேசஒலி - வேறு நாட்டில் இருந்து வணங்க வந்தவர்களின் ஓசையும்,
வீணையொடு - வீணையின் ஒலியுடன் கூடிய. கீதமது - கீதங்களின் ஒலியும்.
வீதிநிறை - வீதிகளின் நிறைகின்ற. (தேவூர் அது) இனி மாதரவர்
பூவைமொழி என்பதற்குப் பெண்கள் பூவைகளைப்பயிற்றும் மொழியின்
ஓசையென்றும், பெண்களின் பூவைபோன்ற மொழியின் ஓசையென்றும்
பொருள் கோடலும் ஆம்.

     5. பொ-ரை: சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக்
கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப்
போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு,
ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின்
தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ்,
மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு,
வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர்
ஆகும்.

     கு-ரை: கானம் உறும் - காட்டில் வாழும். மான்மறியன் - மான்கன்றை
ஏந்தியவன். யானை உரிபோர்வை - யானைத்தோலாகிய போர்வையோடு.
கனல் ஆடல் புரிவோன் - நெருப்பில் ஆடுபவன்.