3610. |
வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு |
|
வித்தமதி
யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற
வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை
யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள்
கொண்டலன சண்பைநகரே. 8 |
8.
பொ-ரை: கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின்
மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய, அறிவற்ற ஆனால்
வலிமையுடைய இராவணனின் மார்பு, கைகள், தலைகள் ஆகியவை
மலையின்கீழ் நொறுங்கும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி, பின் அவன்
தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும், நீண்ட
ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்
தருளும் தலமாவது, சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில்
கூடிவந்து வணங்க, தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி,
மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க
திருச்சண்பைநகர் ஆகும்.
கு-ரை:
வரை - இமயமலையில் அவதரித்த. குலமகட்கு - சிறந்த
உமாதேவியாருக்கு. ஒரு மறுக்கம் - அச்சத்தை. வருவித்த - உண்டாக்கிய.
மதி இல் - புத்தியில்லாத. வலியுடை - வலிமையையுடைய. அரக்கனது
இராவணனது. உரகரசிரத்து - மார்பு, கைகள், தலைகளில். உற - அழுந்த.
அடர்த்து - நெருக்கி, (பின் அவன் வேண்ட அருள் புரிந்த). அழகன் -
அழகனாகிய சிவபெருமானின். இருக்கை அது - இருக்கும் தலமாவது. ஏழ்
விழவினில் - ஏழாந்திருவிழாவில். இமையோர் குழுமி - தேவர்கள் கூடி
வணங்க. கொண்டலன - மேகம் படிந்தனவாகிய.
மலி
- செழித்த. தண் பொழில்கள் - குளிர்ச்சி பொருந்திய சோலைகள்.
தருக்குலம் - கற்பகச் சோலையை. நெருக்கும் - வருத்தும்; சண்பைநகர்,
வணங்க என ஒரு சொல் வருவிக்க.
அக்காலத்துத்
திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று
வந்தனவென்பதை இப்பதிகத்தாலும் அப்பர் திருநேரிசையில் வருவதாலும்
அறிக.
|