3611. |
நீலவரை போலநிகழ்
கேழலுரு |
|
நீள்பறவை
நேருருவமாம்
மாலுமல ரானுமறி யாமைவளர்
தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு
நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு
கிள்ளைபயில் சண்பைநகரே. 9 |
9.
பொ-ரை: நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட
திருமாலும், பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும், அறியாத
வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு
வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான், சேல்மீனும், வேலும் ஒத்த
கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம், சுற்றியுள்ள
அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும், சோலைகளில் குயில்களும், மற்ற
பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும்.
கு-ரை:
நீலவரைபோல - நீலமலையைப்போல. நிகழ் - பொருந்திய.
கேழல்உருஆம் - பன்றியின் வடிவம் தாங்கிய. மாலும் - திருமாலும். நீள்
பறவை - பெரிய அன்னப்பறவையாகிய. நேர் உருவம் ஆம் - நேரிய
உருவம் ஆன. மலரானும் - பிரமனும். அறியாமை - அறியாவாறு. வளர்தீ
உருவம் ஆன - வளர்ந்த நெருப்பின் வடிவு தாங்கிய. (பரமன்) வரதன் -
சிவபெருமான். சேலும் - மீனையும். இனம் - சிறந்த. வேலும் அடை -
வேலையும்போன்ற. கண்ணியொடு - கண்களையுடைய உமாதேவியாரோடு.
நண்ணுபதி - தங்கும் தலமாவது. சூழ்புறவு எலாம் - தலத்தைச் சூழ்ந்த
புறம்பு ஆகிய இடங்களில் எல்லாம். சாலி - நெற்பயிர்களும். மலி -
செழித்த. சோலை - சோலைகளில். குயில் - குயில்களும். புள்ளினொடு -
ஏனைப் பறவைகளும். கிள்ளை - கிளிகளும். பயில் - தங்கியுள்ள (சண்பை
நகர்) வரதன் - வரந்தருபவன்.
|