மந்திரித்துக் குடிக்கச் செய்தன. பீலி கொண்டு தடவினர். இயன்றன அனைத்தும் செய்து ஓய்ந்தனர். இவற்றிற்கெல்லாம் நோய் மேலும் அதிகரித்ததே ஒழியக்குறையவில்லை ‘ஐயோ இனி என்செய்வது’ என்றுகலங்கி அமணர் அனைவரும் கைவிட்டகன்றனர். சூலை நோயினால் சோர்வுற்ற தருமசேனர்க்குத் தம் தமக்கையாரின் நினைவு வந்தது. தமக்கு அடிசில் அமைப்பவனை அருகில் அழைத்துத் தமக்கையாரிடம் நிலைமையைச் சொல்லி வரும்படி அனுப்பினார். அவனும் அவ்வாறே திருவதிகை வந்து நந்தவனத்திற்கு மலர்கொய்யச் செல்லும் திலகவதியாரைக் கண்டு வணங்கி ‘நும்முடையதம்பியாரின் ஏவலினால் இங்கு வந்தேன்’ என்றனன். அதுகேட்ட அம்மையார் ‘தீங்குளவோ’ என வினவினார், அவனும் ‘சூலைநோய் உயிரைமட்டும் போக்காமல் நின்று குடரை முடக்கித் துன்புறுத்தலால் அமணரெலாம் கைவிட்டகன்றனர். இச்செய்தியைத் தங்கட்குச் சொல்லிவிட்டு இருளாகும் நேரத்திலேயே திரும்பி வருமாறு என்னை அனுப்பினார்’ என்று கூறி நின்றனன். அது கேட்ட திலகவதியார், ‘நன்றறியா அமண்பாழி நண்ணேன்’ இதை அவனிடம்சொல், என மறுமொழிகூறி அனுப்பினார். அவனும் தருமசேனரிடம் சென்று தமக்கையார் கூறியதை அறிவித்தான். தமக்கையார் மறுமொழி கேட்டுத் தருமசேனர் சோர்வுற்றார். இறையருள் கைகூட “இப்புன்சமயத் தொழியாத என் துன்பம் அழியத் திலகவதியார் திருவடிகளை அடைவேன்” என்று எண்ணினார். அவ்வளவிலேயே சிறிது நோய் குறைவதாக உணர்ந்தார். குண்டிகை, பீலி, பாய் முதலியவற்றை உதறி எறிந்து வெள்ளிய ஆடை உடுத்து உண்மைப்பணியாளன் ஒருவனைத் துணைக்கொண்டு நள்ளிரவில் சமண் பாழிகளைக் கடந்து திருவதிகையை அடைந்து திலகவதியாரின் திருவடிகளில் வீழ்ந்து ‘நம்குலம் செய்த நற்றவத்தின் பயன் அனையீர்! உய்ந்து கரையேறும் உபாயம் அருள்க’என வேண்டினார். திருநாவுக்கரசராதல்: திலகவதியார் தம்பியை நோக்கி இறைவன் திருவடிகளை எண்ணித் தொழுது ‘குறிக்கோளில்லாத புறச் சமயப் படுகுழியில் விழுந்து துயருழந்தீர் எழுந்திரீர்’என மொழிய, அவ்வாறே எழுந்து தொழுத மருணீக்கியாரைப் பார்த்துத் திலகவதியார், ‘சூலைநோய் வருதற்குக்காரணம் இறையருளேயாகும்; தன்னைச் சரணடைந்தாரைக் காக்கும் சிவபெருமானை வணங்கிப் பணிசெய்வீராக’ என்று பணித்துத் திருவதிகைத் திருக்கோயிலினுட் புகுதற்குத்தகுதி உடைய
|