ராகும்படித் திருவைந்தெழுந்தோதித் திருவெண்ணீறளித்தனர். திருவாளன் திருநீறு திலகவதியார் அளிப்பப் பெருவாழ்வு வந்ததென மகிழ்ந்து மருணீக்கியாரும் வாங்கித் தரித்துக்கொண்டு தமக்கு உய்யும் நெறிதரும் தமக்கையார்க்குப் பின் தாமும் புறப்பட்டார். மருள் நீக்கியாரின் அகத்திருள் நீங்குமாறு புறத்திருள் நீங்கிப்பொழுது புலர்ந்தது. திலகவதியார் தொண்டு புரியத் திருவலகு தோண்டி முதலியகொண்டு திருக்கோயிலுட் புகுந்தார். தமக்கையார் பின் சென்ற மருள் நீக்கியார் திருக்கோயிலினுட் சென்று வலஞ்செய்து நிலமிசை வீழ்ந்து இறைஞ்சினார். இறைவன் திருவருளால்தமிழ்மாலை சாத்தும் உணர்வுவர, சூலையும் மாயையும் நீங்கும் பொருட்டுக் “கூற்றாயினவாறு” என்று தொடங்குந் திருப்பதிகம் அருளிச் செய்தார். திருப்பதிகம் பாடும்பொழுதே சூலைநோய் நீங்கியது. சிவபெருமான் திருவருட்கடலில் மூழ்கித் திளைத்தார். கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகத் தம்மைப் புறச்சமய இருளிலிருந்து மீட்டருளிய சூலைநோய்க்கு நன்றி தெரிவித்துத் திருவருள் இன்பத்தில்திளைத்து நின்றார். இவ்வேளையில் யாவரும் வியப்பவானிடை இறைவன் திருவாக்கு எழுந்தது ‘செந்தமிழ்ச் சொல்மலராலாகிய பாமாலை பாடிய தன்மையால் நின்பெயர்‘நாவுக்கரசு’ என உலகேழினும் வழங்குக’ என்றெழுந்த அருள்மொழி கேட்டு ‘இப்பெருவாழ்வு அடைதற்குரியதோ’என வியந்து இராவணனுக்கும் அருள்செய்த இறைவனது வள்ளன்மையைப் பாடுவதையே கடமையாகக் கொண்டு அதிகைப்பெருமானை வணங்கிப் போற்றினார். இவ்வாறு மருணீக்கியார் இறைவன் திருவருள்பெற்றுத் திருநாவுக்கரசராகப் புறச்சமய இருள்நீக்கப் புறப்பட்டதை எண்ணி உலகம் மகிழ்ந்தது. திருநாவுக்கரசர் சிவ சின்னங்கள் அணிந்து உழவாரப்படை ஏந்தி, முக்கரணங்களாலும் பக்தி செய்ய முற்பட்டார். “நாமார்க்கும் குடியல்லோம்” : திருநாவுக்கரசர் சிவநெறி சேர்ந்தசெய்தி சமணர் செவிகட்கு எட்டியது. தம் சமயத்தை நிலைநிறுத்திவந்த தருமசேனர் ‘சைவம் சார்ந்து ஒருவராலும் நீக்கமுடியாத சூலைநோய் நீங்கப் பெற்றார்’ என்பதை உலகம் அறியின், நம்மதம் அழியும் என்றஞ்சினர். மன்னனுக்கு இச்செய்தியை மறைத்து மொழிந்தனர். ‘தருமசேனர் தம் தமக்கையார் மேற்கொண்டிருக்கும் சமயத்தைச் சார விரும்பிச் சூலை
|