(நின்) அடி (மலர்)க்கே வணங்குவன். இந்நோய் என் வயிற்றின் உள்ளே அடியில் பற்றித் தன்னைத் தோற்றாமல் குடரொடு துடக்குண்டு என்னை முடக்கியிடலால், அடியேன் ஆற்றாமல் வருந்துகின்றேன். இவ்வருத்தம் அகற்றி அடியேனை ஆட்கொண்டருள்வாய். திருவதிகை மாநகர்க் கடவுளை மருணீக்கியார் (திருநாவுக்கரசு சுவாமிகள்) முதன் முதலில் நோக்கியபொழுதில் தம்மை அறியாதே திருவாயினின்றும் போந்த மொழியாவது, தம் உள்ளத்திற் பொருளாக இருந்த துன்பத்தை நீக்கிக் கொள்ளல் வேண்டும் என்பது. அஃது அல்லாமல் வேறொன்றாயிருத்தல் பொருந்தாது. அதனால் தொடக்கத்திலே ‘கூற்று ஆயினவாறு விலக்ககிலீர்’ என்று வெளியாயிற்று. அது கேட்ட முழுமுதற் பொருள், ‘இக்கூற்றுஆகி வந்த நோயினை அடைந்து வருந்துமாறு பல கொடுமைகளைச் செய்தனை. அக்கொடுமைகளை அடியாகக் கொண்டே இவ்வருத்தம் உண்டாயிற்று’ என்று குறித்தது. அதுகேட்ட சுவாமிகள், ‘அவற்றை நான் அறியச் செய்திலேன். என்னை அறியாமல் செய்த கொடுமைகள் பல இருக்கலாம். இருப்பினும் நான் அக்கொடுமைக்கோ அவற்றின் பயனுக்கோ கொள்கலம் ஆகும் பெற்றியேன் அல்லேன். இரவிலும் பகலிலும் எப்பொழுதும் பிரியாமல்(இடை விடாமல்) விடையேறி திருவடிக்கே வணங்கும் பணிசெய்துகிடப்பேன். திருவடிக்கு அடிமை பூண்ட என்னையும் அவ்வினைவருத்துதல் முறையோ? ஏற்றாய்க்கு இஃது ஏலாது (அறத்தின்வடிவமே ஊர்தியாம் ஏறு)’ என்றார். “அச்சோ! கெடிலத்தின் வடபால் விளங்கும் திருவதிகையில் வீரட்டானத்தில் எழுந்தருளிய அம்மானே! சூலை நோய் தன்னைப் புலப்படுத்தாமல் என் வயிற்றின் உள்ளே அடியிலே குடலொடு துடக்குற்று, முடக்கியிடுதலால் உண்டாக்கும் வருத்தத்தினைப் பொறுக்கும் வலியில்லேன். அறிந்து செய்த வினையின் பயனாயினும் அறியாது செய்த வினையின் பயனாயினும், இத் துயரம் தீர்த்து அடியேனைக் காத்தருள்வாய்”என்றார் சுவாமிகள். விளக்கம் வேற்றுச் (சமண்) சமயத்தில் இருந்த காலம் முழுதும் பரம சிவனைத் தொழாதாராகியும், இரவும் பகலும் எப்பொழுதும் பிரியாது
|