| 3. திருவையாறு பதிக வரலாறு: கயிலைமலை காணக் காதலித்த கலைவாய்மைக் காவலனாராகிய தமிழாளியார் கால் தேயக், கை சிதைய, மார்பு நைய, என்புமுரிய, ஊன் கெடப் பழுவம் புரண்டு புரண்டு சென்று, அங்கம் எங்கும் அரைந்திடப், புறத்து உறுப்பழிந்தபின் அகத்து முயற்சியும் தப்புறச், செயலற்று அந்நெறியில் தங்கினார். மன்னுதீந்தமிழ்ப் புவியின் மேற் பின்னையும் வழுத்த வேண்டிக் கயிலையை அணைவதற்கு அருளாத பன்னகம்புனை பரமர் ஓர் முனிவராம்படி தோன்றி, மொழி வேந்தர் குறிப்பைக் கேட்டு ‘மானுடப்பான்மையோர் அடைவதற்கு எளிதோ கயிலை மால்வரை? மீள்வதே உமக்குக் கடன்’ என்றார். ‘ஆளும் நாயகன் இருக்கை கண்டல்லால் மாளும் இவ்வுடல் கொண்டு மீளேன்‘ என்றார் மீளா ஆளாய அப்பர். மாதவர் விசும்பிற் கரந்தார். ‘ஓங்கும் நாவினுக்கு அரசனே! எழுந்திரு!‘ என்றார். சொல் தவறாத அரசர் எழுந்து ஒளி திகழ்வாராய், ‘அண்ணலே! அமுதே! திருக்கயிலையில் இருந்த நின்கோலத்தை நான் தொழ அருள்புரி; என்றார். ‘அம்முறைமை திருவையாற்றிற் காண்; என்றார் இறைவர். திருப்பாடல் பல பாடித் திருவைந்தெழுத்து ஓதி முழுகினார், அங்கிருந்த ஒரு திருக்குளத்தில். பின் திருவையாற்றுத் திருக்குளத்தில். தோன்றிவந்தெழுந்தார் சொல்லரசர். இரு கண்ணீரிலும் குளித்தார். நிற்பவும் சரிப்பவும் துணையொடும் பொலியக் கண்டார். அவற்றில் சத்தியும் சிவமும் ஆம் சரிதையைப் பணிந்தார். தேவர் முதல் யாவரும் சூழ மலையாளுடன் வீற்றிருந்த வள்ளலாரைக் கண்டார் வாகீசர். கண்ட ஆனந்தக் கடலைக் கண்களால் முகந்து கொண்டார்; உருகினார்; ஆடினார்; பாடினார்; அழுதார். அவர்க்கு அங்கு நிகழ்ந்தனவற்றைச் சொல்லவல்லார் யார்? அருள் தண்ணளி செய்து எதிர்நின்றது ஐயாற்றில் உள்ள அழியாத் தேனை உண்டு களித்தார் உரை வேந்தர்; பதிகம் பல பாடினார். அவற்றுள் ஒன்று கோதறு தண்டமிழ்ச் சொல்லாகிய இத் திருப்பதிகம். |