பக்கம் எண் :

37
 

தலை செய்த குற்றத்தைதலைவணங்கித் தீர்த்துக்கொள்க.

கண் செய்த குற்றத்தை இறைவனைக் கண்டுஅக்குற்றம் நீக்குக.

அதேபோல், நெஞ்சு, கை, ஆக்கை (உடம்பு) மூக்கு, வாய், கால்கள், செய்த குற்றங்கள் தீர அவ்வவ்வுறுப்புக்களையும்இறை வழிபாட்டில் ஈடுபடுத்தி வினை நீங்கி விளக்கம் உறுக என்று அறிவுறுத்துகிறார். அங்கம் - உறுப்பு. இக்கருத்துக்களைத் திருஅங்கமாலைத் திருப்பதிகத்து (தி.4 ப.9) விளக்கமாகக் காண்க.

தேர்ப்பாகன் கூறிய அறம்:

விரைந்து செல்லத்தக்க சிறந்த தேராயினும் கயிலைநாதன் வீற்றிருக்கும் கயிலாய மலைக்குமேல் நம் தேர் செல்வது அறம் அன்று என்று தேரைச் செலுத்திய பாகன் அறம்கூறினான். அவ் அறம் மொழிந்த பாகனை முனிந்து நோக்கி தேரை விடு விடு என்று சொல்லி வரையுற்றெடுத்தான் இராவணன். அவனது முடியையும் தோளையும் நெடு நெடு இற்றுவீழ விரல்வைத்த பெருமானின் பாதத்தை என்மனம் நினைவுற்றது என்று “கடுகியதேர் செலாது” (தி.4 ப.14 பா.11) என்ற பாடலில் அப்பர் குறிப்பிடுகின்றார். இவ்வரலாற்றுக் குறிப்பு இப்பாடலில் மட்டுமே காணப்படுகிறது.

அரநெறி அப்பர்க்கு ஆலயம்:

திருவாரூர்ப் பூங்கோயிலில் வன்மீகநாதர் சந்நிதியின் எதிரில் வலப்பக்கம் உள்ளது அரநெறியப்பர் ஆலயம். இது நமிநந்தியடிகள் நீரால் விளக்கு எரித்த நீர்மை உடையது. செருத்துணை நாயனார் மலர்த்தொண்டு செய்த சிறப்புடையது. வெண்மதியைக் கண்ணியாகவும் கொன்றை மலரை அடையாள மாலையாகவும் கொண்ட அரநெறியப்பர்க்கு ஆலயம் காலையும் மாலையும் கைதொழுவார் மனமேயாம் என்கிறார்.

“...........

காலையு மாலையுங் கைதொழு வார்மனம்

ஆலைய மாரூ ரரநெறி யார்க்கே.”

-தி.4ப.17 பா.8

என்பது அப்பாடல் பகுதி. இக்கருத்தையே ஐந்தாம் திருமுறையின் தில்லைப் பதிகத்தில் “நினைப்பவர்மனம் கோயிலாக் கொண்டவன்” என்று அருளியுள்ளமையும் இங்குக் கருதத்தக்கது.