பக்கம் எண் :

64
 

திருநாவுக்கரசு சுவாமிகள், இத்திருமுறையிலே ‘பண்ணிய சாத்திரப் பேய்கள்’ (பா.982) என்றதன் கருத்தை உணர்வோர்க்கு இது தெளிவுறும்.

‘அல்லும் பகலுமாய் நின்றார் தாமே’ எனத் தொடங்கும் திருத்தாண்டகத்தில் ‘சொல்லும் பொருளெலாம் ஆனார்தாமே தோத்திரமும் சாத்திரமும் ஆனார்தாமே’ என்றருளினார் திருநாவுக்கரசர். அதில், சிவபிரான் அல்லும் பகலும், அந்தியும் சந்தியும், சொல்லும் பொருளும், தோத்திரமும் சாத்திரமும், பாவும் ஆகும் பொது வியல்பு (தடத்த ரூபம்) கூறப்பட்டது.

அன்பு முதிரச்செய்து அருள் பெறுவிப்பது தோத்திரம். அருளை (அறிவை) முற்று வித்து அழியாதஇன்ப அன்பு அடைவிப்பது சாத்திரம்.

“ஆனாய் என்பது அனைத்தும் அவ்வகை
தான்ஆ காமையைச் சாற்றிடும் என்க.”

சங்கற்பநிராகரணத்தில், உமாபதிதேவ நாயனார் அருளிய இவ்வுண்மையை உணர்க. சிவபெருமானுடைய உண்மையியல்பு (சொரூபலட்சணம்) ஒரு காலத்தில் ஆவதன்று; என்றும் உள்ளது. ஆவன அனைத்தும் முன்னின்மை (பிராகபாவம்) முதலியவற்றை உடையனவாகும். சிவபிரானார் ‘தோத்திரமும் சாத்திரமும் ஆனார்’எனின், அவர், அவ்விரண்டும் ஆவதன்முன் அவையாயில்லை. அவர் அவ்விரண்டுருவும் ஆன பின்னரே அவ்வத் தோத்திரமாகவும் சாத்திரமாகவும் அவரைப் போற்றிப் பயன் எய்துதல் உயிர்கட்குக் கூடும். கூடுங்கால், அம் முழுமுதற்பொருள் ‘தோத்திரம்’ என்னும் சொல்லின் பொருளாய்த் திகழ்கின்றார். அவ்வாறு திகழும் சிவபெருமானைத் தோத்திரங்களாக வழிபடும் ஆற்றல் சிலர்க்கே எய்தும். அத்தோத்திரங்களையுடைய ஏட்டு வழிபாடுதான் பெரும்பாலும் நிகழும். இரண்டுமாக வழிபடுவது சாலச் சிறந்தது.

திருமடாலயங்களில் இச் சிறப்பு வழிபாடு நாடோறும் நிகழ்கின்றது. தோத்திரம் சாத்திரம் இரண்டையும் அவ்விருவழியிலும் போற்றுதல்அறிவும் அருளும் பெறுவார்க்கு உரிய கடனாகும்.

ஆதலின், தோத்திர நூல்களும் சாத்திர நூல்களும் கிடைக்கும் வழியை வகுத்தல் சிவ நல்வினையுள் மிகச் சிறந்ததாயிற்று.