பக்கம் எண் :

72
 

உரையைப் படிக்குங்கால் என் உள்ளத்தே நச்சினார்க்கினியர், பரிமேலழகர், பேராசிரியர் முதலிய தமிழ் உரையாசிரியர்கள் நினைவே மேலோங்கி நின்றது. ஏன்? அதே அழகு நடை; தேர்ந்த சொல்லாட்சி; தெளிவான விளக்கம்: ஏற்ற மேற்கோள்; இனிய சொல்லாராய்ச்சி. திருப்பதிக வரலாற்றைப் படிக்கின்ற போதெல்லாம் பெரிய புராணப் பூங்காவுக்குள் நுழைந்து சேக்கிழாரின் கவி மணத்தை உரை மணமாக நுகரக்கூடிய வாய்ப்புங் கிடைத்தது.

பொருள்காணும் வகையில் நம் உரையாசிரியர் கொண்டுள்ள முறை புதியது. வினாவும் விடையுமாகப் பொருள் விளக்கம் புரிகின்றார். எடுத்துக்காட்டாக முதற் பதிகத்துள் ‘கூற்றாயினவாறு’ என்ற முதற்பாடலுக்கமைந்த உரையைக் காட்டலாகும். சித்தாந்த சாத்திர நுணுக்கங்கள் கூடிய பகுதியாக அவ்வுரைப் பகுதி ஒளிர்கின்றது. அகம்பு, புறம்பு என்ற சொல்லாராய்ச்சி இனியது.

வஞ்சம் என்ற சொல், வல்+து+அம் என்ற மூன்றன் மருவிய வடிவமே என்பதனை நிறுவியுள்ளார்.(பதி. 1 - 2)

ஏடு - இளைது; சிந்தாமணி (446 -1552) இளைது - இளது - ஈள்து - எள்து - ஏடு என மருவிற்று’ (பதி.3 - 5) என்ற விளக்கம் ஆய்தற்குரியது.

‘வண்ணப் பகன்றிலோடாடி வைகி வருவன் கண்டேன்’ (பா.26) என்புழிப் பகன்றில் என்ற சொல்லினைப் பற்றிய ஆராய்ச்சியை நிகழ்த்தியுள்ளார். ‘பக + அன்றில், மக + அன்றில் இரண்டும் துணை பிரியா மகன்றில். மகன்று - மகனை (ஆணை) உடையது. துணை பிரியா மகன்றில் என்றதை நோக்கி, பகு + அன்றில் எனப்பிரித்து துணைபிரியா அன்றில் எனலாம். பகன்றில் என்பது மகன்றில் என மருவியுமிருக்கலாம். பிரியாத இயல்பு நோக்கிப் பகா அன்றில் என்றிருந்தது பகன்றில் என மருவியதெனலும் கூடும்’ என்ற விளக்கம் ஆய்தற்குரியதே.

‘பற்றிக் கயிறறுக்கில்லேன் பாடியும் ஆடா வருவேன்’ - என்புழி (பா. 29). ‘பாசம் என்னும் வடசொற் பொருள்பற்றிக் கயிறு எனப்பட்டது’ - என்று விளக்குதல் ஆய்வாளர்க்கு ஓர் புதிய செய்தியாகும். கயிறு என்று கூறுதலைப் பற்றிப் பாசம் என்ற வடசொற் பிறந்திருக்கலாகாதா என்று வினாவுவார்க்கு இவ்வுரையாசிரியரின் விடை இது.