பக்கம் எண் :

75
 

‘தேரையும் மேல்கடாவித் திண்ணமாத் தெழித்துநோக்கி’ என்றவிடத்து (பா. 334) ஆள் + மை, ஆண்மை எனக்காட்டி ஆளின் தன்மை என்று கூறுதலே சிறந்தது என்று குறித்து, ‘ஆளும் தன்மையெனின் ஆள் என்பது வினையாகும்; தமிழில் மை என்பது வடமொழியில் துவம் என்றது போல்வது; பண்புணர்த்துவது’ என்றெழுதியிருத்தலும் நோக்கி மகிழ்தற்குரியது.

‘நாள்முடிக்கின்ற சீரான் நடுங்கியே மீது போகான்’ (பா. 334) என்ற விடத்து நாள் முடிக்கின்ற சீரான் - செங்கதிரோன். நாளிறு என்றதன் மரூஉவே ஞாயிறு ... ... செங்கதிர்த் தோற்றத்தை அடியாகக் கொண்டு கணக்கிடுவதே நாள். நாள் இறுதற்கும் அதுவே அடியாகும். அதனால் அக்கதிரை நாளிறு என்றனர் செந்தமிழர். அது ஞாயிறு என்று மருவிற்று என்றெழுதியிருத்தல் தமிழ்ச்சொற்களின் ஆழமுடைமையை உரையாசிரியர் உளங்கொண்டுள்ள செய்தியை மேலும் உரைக்கும்.

‘ஞாலமும் குழிய நின்று நட்டமதாடுகின்ற மேலவர்’ என்புழி (பா.370) நட்டம் - திருக்கூத்து; இது தமிழ்ப் பெயர்; வடசொற் சிதைவு அன்று; ‘கொட்டம் வட்டம் போல்வது’ என விளக்கியிருத்தல் அனைவரும் உணரவேண்டிய பகுதியாகும். நிருத்தம் என்ற சொல் தான் நட்டமாயிற்று எனச் சொல்வோர்க்கு இது தக்க வாய்ப்பூட்டாக அமையுமல்லவா? இவ்வாறே சாடவெடுத்தது (பா.789) என்ற பாடல் உரையிலும் ‘நட்டம் வடசொற்சிதைவன்று; தமிழ்ச்சொல்’ என்று வற்புறுத்தியுள்ளனர், பின்னரும்.

‘இரப்பவர்க்கீய வைத்தார் ஈபவர்க்கருளும் வைத்தார்’ என்ற 383ஆம் பாடல் உரையில், இரத்தல புரத்தல் இரண்டும் மறுதலைப் பொருளன என்ற செய்தியைப் புறநானூறு முதலிய பழந்தமிழ் இலக்கியச் செய்யுளாட்சி காட்டி ஆய்ந்துரைத்திருத்தல் சீரியதாகும்.

‘தருவினை மருவும் கங்கை’ என்ற 439ஆம் பாடற்றொடரில் கொடுக்குஞ் செயல் என்றும், மரங்களையென்றும் இரு பொருள்கண்டு அச்சொற்றொடராற்றலைத் தெற்றெனப் புலப்படுத்தியுள்ளமை உளம் கொளற்குரியது.

‘கனகமா வயிர முந்து மாமணிக்கயிலை கண்டும், உனகனாய் அரக்கனோடி’ என்ற 456ஆம் பாடற் பகுதியில் உனகன் என்ற சொற்கு உன்னுகின்ற அகத்தையுடையவனாய் என்றதோடமையாது இழிந்தவன் என்ற (லெக்சிகன்) பொருளையும் புலப்படுத்தியுள்ளார்.