எடுத்துக்காட்டுதல் இனியவோர் பகுதி. ‘செஞ்சடைக் கற்றை முற்றத்து’ எனத் தொடங்கும் 218ஆம் பாடலில் (மஞ்சு - மை + து - மைத்து, மைந்து, மைஞ்சு, மஞ்சு என ஆகியதை விளக்கியுள்ளார். இருள் + பு என்பதன் மரூஉவே இரும்பு என்பதும், சுருள் + பு என்பதன் மரூஉவே சுரும்பு என்பதன் 239ஆம் பாடலில் விளக்கியுள்ள சொல்லாராய்ச்சிச் செய்திகள். ‘நொய்யவர் விழுமியாரும்’ என்ற 285ஆம் பாடலில், ‘இடிந்த + இல் இடிந்த வில்; அதன் மரூஉ இடிஞ்சில் என்பது. குற்றிற்சுவர் என்பது குட்டிச்சுவர் என மருவிற்று, குறு + இல் குற்றில். இடுஞ்சில் இடிஞ்சில் என மருவியது’ என்ற விளக்கத்தை நன்கு உணர்தல் வேண்டும். ‘பள்ளியா நெஞ்சத்துள்ளார் பஞ்சமம் பாடியாடும்’ என்புழி (பா.286) “பஞ்சமம் - பண்சமம் - பஞ்சம சுருதி பற்றியது - ஒருபண்” என்று விளக்கியிருத்தல் மிக வினியவோர் உரைப் பகுதியாகும். ‘இந்திரனோடு தேவர் இருடிகள்’ என்று தொடங்கும் திருமறைக்காட்டுத் தேவாரத்தின் (பா. 324) உரையில் (துதிக்கல் - துதி + க் + கு + அல்) குகரச் சாரியையும் சந்தியாகிய ககர வொற்றும், தொழிற்பெயர் விகுதியாகிய அல்லும் துதி என்னும் வடசொற் பகுதியுடன் இயைந்து தொழிற்பெயர்ப் பகுபதம் ஆயிற்று. கதி, மதி, திதி, உதி முதலிய பிற வடசொற்பகுதிகளுடனும் இவ்வாறு இயைந்து ஆன சொற்கள் உள. பழந்தமிழில் ‘இன்னோ ரன்னவை இல’ என்ற விளக்கப்பகுதி சிந்தை கவரும் ஒன்றாம். ‘பாயன நாடறுக்கும் பத்தர்கள் பணியவம்மின்’ என்ற விடத்து (பா.325). ‘பாயன நாடு - பரப்பினாலொத்த நாடு’ (உலகம்) பாயனம் - பாசனம்; நீர் பாய்த்துகின்ற நாடு எனலுமாம்’ என்று விளக்கியிருத்தல் அறிதற்குரியது. ‘மனத்தினுள் மாசு தீர்ப்பார் மாமறைக் காடனாரே’ என்புழி (பா. 331) மாசு என்ற சொல் மறு+து, மறுது, மறுசு, மாசு என மருவிய சொல்லென்று விரித்துரைத்திருத்தல் அறிந்து இன்புறத்தக்கது.
|