பேணிவரும் பெருந்தகையாளராதலின், இவ்வுரையாசிரியர் தம்முடைய உரைப்போக்கிலும் அப்பற்றைத் தம்மை யறியாமலேயே வெளிப்படுத்துவாராயினர் எனலாம். பிறநூல் தெளிவுரை பகுதிகளில் சில: “ஏமத்தும் இடையிராவும் ஏகாந்தம் இயம்புவார்க்கு ஓமத்துள் ஒளியதாகும் ஒற்றியூருடைய கோவே” என்ற (பா.44) பாடல் உரையில், ஏகாந்தம் - ஒருதலை. பரிமேலழகர் உரையின் வாய்மையை உணரமாட்டாமல் பொருத்தம் இன்றி எழுதியதோருரையைப் பொருளாகக் கொண்டு செல்வம் என்று உரைப்பது பொருந்தாது. இறைவனை இயம்புவார்க்கு ஏகாந்தம் இன்றி அநேகாந்தம் ஒவ்வாது” என்றெழுதியிருத்தல் அறிவிற்கோர் புதுமை. கம்பராமாயணத்தில் ஓர் பாடலுக்கமைந்த நேரிய பொருளைத் திருவையாற்றுப் பதிகத்துள் ஓர் பாடல் உரையில் (பா.894) விளக்கியுள்ளார் நம் உரையாசிரியர். “பொலம்புண்டரீகப் புதுமலர் போல்வன்” என்ற தொடரில் புதுமலர் - நாண்மலர் என்று பொருளெழுதியபின் உரையாசிரியர் இதற்கு ஓர்ஒப்புமைப் பகுதியாகக் கம்பன் பாடலைக் காட்டுகிறார். எப்படி? “இராமன் திருமுகச் செவ்விநோக்கில் ஒப்பதே முன்பு பின்பு, அவ்வாசகம் உணரக் கேட்ட அப்பொழுது, அலர்ந்த செந்தாமரையினை வென்றது” - இங்கு முன்பும் பின்பும் தாமரையை ஒப்பது; வாசகம் கேட்ட அப்பொழுது மாத்திரம் அம்மலரை வென்றது இராமன் திருமுகம் என்ற வாய்மையை உணர்க. முன்பு, பின்பு. அப்பொழுது என்ற முக்காலத்தையும், சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரை ஒத்திருக்கும் முகம் அதனை வென்ற பொழுதைக் கூறும் அரியதோர் இடத்தையும் உணராத பிறர் ‘கேட்ட அப்பொழுது’ என்னாது’ அப்பொழுது அலர்ந்த செந்தாமரை’ என்றனர். முன்பு திருக்குறளில் ஓர் சொல்லாட்சியைச் சமயம் வந்த போது நன்கு விளக்கிய நம் உரையாசிரியர், இவ்விடத்துக் கம்பநாடன் கருத்தொன்றினை விளக்கியுரைத்தமை போற்றத்தக்கது.
|